மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடை விழா மார்ச் 2-ந் தேதி தொடக்கம்

22 hours ago 1

கன்னியாகுமரி,

பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடைவிழா மார்ச் 2-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான 2-ந் தேதி காலை 7.21 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. விழா நாட்களில் காலை மற்றும் இரவு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல், பல்வேறு ஊர்களில் இருந்து சந்தனக்குடம் பவனி வருதல் போன்றவை நடக்கிறது.

7-ந் தேதி இரவு 11.30 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜையும், 10-ந் தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியும், 11-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அடியந்திர பூஜை, 5 மணி முதல் பூமாலை குத்தியோட்டம், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி, 1 மணிக்குள் ஒடுக்குபூஜை போன்றவையும் நடக்கிறது.

விழா நாட்களில் கோவில் தங்கும் விடுதி வளாகத்தில் தனிப்பந்தலில் ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 88-வது இந்து சமய மாநாடு நடக்கிறது. இதில் 2-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஜனை, 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம் போன்றவை நடைபெறும். தொடர்ந்து நடைபெறும் சமய மாநாட்டை மத்திய இணை மந்திரி முருகன் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றுகிறார். வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்த ஆஸ்ரமத் தலைவர் சுவாமி சைதன்யானந்த மகராஜ் மற்றும் திருநெல்வேலி தருமபுரம் ஆதீனமடம் மவுன மீனாட்சி சுந்தர தம்புரான் சுவாமிகள் ஆசியுரை வழங்குகின்றனர். சிறப்பு விருந்தினராக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசுகிறார். நிகழ்ச்சியில் பலர் வாழ்த்தி பேசுகிறார்கள்.

11-ந் தேதி காலை 11 மணிக்கு தேசிய சேவா சங்கம் மற்றும் சேவா பாரதி சார்பில் அன்னதானம், இரவு 12 மணிக்கு ஒடுக்குபூஜை போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர். 

Read Entire Article