பர்மிங்காம் டெஸ்ட்: 3-ம் நாள் முடிவில் 244 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா

6 hours ago 2

பர்மிங்காம்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 18 ரன்களுடனும் , ஹாரி புரூக் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜோ ரூட் (22 ரன்கள்), பென் ஸ்டோக்ஸ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டையும் ஒரே ஓவரில் சிராஜ் காலி செய்தார். இதனால் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த இக்கட்டான சூழலில் 6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஹாரி புரூக் - ஜேமி சுமித் கூட்டணி சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்திய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடியில் இருவரும் சதமடித்து அசத்தினர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் இந்திய அணி திணறியது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் 150 ரன்களை கடந்து அசத்தினர். இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 300 ரன்களை கடந்தது. இந்திய அணியை அச்சுறுத்தி வந்த இந்த ஜோடியை ஒரு வழியாக ஆகாஷ் தீப் உடைத்தார். அவரது பந்துவீச்சில் ஹாரி புரூக் 158 ரன்களில் போல்டானார். 6-வது விக்கெட்டுக்கு ஹாரி புரூக் - ஜேமி சுமித் கூட்டணி 303 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் களமிறங்கிய வீரர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. கிறிஸ் வோக்ஸ் 5 ரன்களிலும், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டாங் மற்றும் ஷோயப் பஷிர் ஆகியோர் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர். முடிவில் 89.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 407 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இது இந்திய அணியை விட 180 ரன்கள் குறைவானதாகும். இங்கிலாந்து தரப்பில் ஜேமி சுமித் 184 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 28 ரன்கள் எடுத்து டாங்கு பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. அத்துடன், 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கே.எல்.ராகுல் 28 ரன்னுடனும், கருண் நாயர் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 4-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

 

Read Entire Article