மண்டல, மகரவிளக்கு காலங்களில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு தலா ரூ5 லட்சம் இன்சூரன்ஸ்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்பாடு

2 weeks ago 4


திருவனந்தபுரம்: இவ்வருடம் மண்டல, மகரவிளக்கு காலங்களில் சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் ரூ5 லட்சத்திற்கான இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் கூறினார். இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 15ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கோட்டயத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின் கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் நிருபர்களிடம் கூறியது: மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வருடம் சபரிமலை வரும் பக்தர்கள் அனைவருக்கும் ரூ5 லட்சத்திற்கான இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. பக்தர்கள் மரணமடைந்தால் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்.

பொதுப்பணித்துறை சாலைகளை சீரமைக்கும் பணிகள் உள்பட அனைத்துப் பணிகளும் நவம்பர் 10ம் தேதிக்குள் நிறைவடையும். 1000 தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். 13,600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக 1000 ஸ்டீல் நாற்காலிகள் போடப்படும். நிலக்கல், பம்பை சன்னிதானம் ஆகிய இடங்களில் இ டாய்லெட்டுகள், பயோ டாய்லெட்டுகள், பெண்களுக்கான 100 கழிப்பறைகள் உள்பட 3,080 கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிலக்கல்லில் கடந்த வருடம் 7500 வாகனங்கள் மட்டுமே நிறுத்த இட வசதி இருந்தது. இம்முறை 10,000 வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாஸ்ட் டாக் முறையில் கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த வருடம் சபரிமலைக்கு வந்த 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்வருடம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மண்டல, மகரவிளக்கு காலங்களில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு தலா ரூ5 லட்சம் இன்சூரன்ஸ்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்பாடு appeared first on Dinakaran.

Read Entire Article