மண்டல காலம் நிறைவு: சபரிமலை கோவில் நடை அடைப்பு

6 months ago 21

திருவனந்தபுரம்,

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் (கார்த்திகை 1-ந்தேதி) மண்டல காலம் தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

41 நாட்கள் நடந்து வந்த பூஜையின் சிகரமாக மண்டல பூஜை இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி இன்று நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் மண்டல பூஜை நடைபெற்றது. அய்யப்பன் தங்க அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முன்னதாக மண்டல பூஜையையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து கடந்த 22-ந்தேதி 450 பவுன் தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் நேற்று மதியம் பம்பைக்கு வந்தடைந்தது. அங்கு கணபதி கோவிலில் சிறப்பு வழிபாடுக்கு பிறகு மாலை 3 மணிக்கு சபரிமலை நோக்கி புறப்பட்டது. நீலிமலை, அப்பச்சிமேடு, மரக்கூட்டம், சரம்குத்தி வழியாக தங்க அங்கி தலைச்சுமையாக சன்னிதானம் கொடி மரம் அருகே கொண்டு வரப்பட்டது. அங்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிறகு மாலை 6.15 மணிக்கு தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தங்க அங்கி கொண்டு வரப்பட்டதால் நேற்று பிற்பகலுக்கு பிறகு பக்தர்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படவில்லை. இன்றைய மண்டல பூஜைக்கு பிறகு பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

மீண்டும் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைக்கு பிறகு இரவு 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என்றும், மகர விளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் மண்டல பூஜை நிறைவுபெறுகிறது. பிறகு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக 3 நாட்களுக்கு பிறகு வருகிற 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 14-ந்தேதி முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மகரவிளக்கு ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

Read Entire Article