
சென்னை,
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அந்த நிகழ்வில் நடிகர் சிம்பு பேசுகையில்,
'மணிரத்னம் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய படத்தின் படப்பிடிப்பிற்கு ஒருநாள் கூட நான் தாமதாக சென்றதில்லை. அது பயத்தினால் அல்ல. ஒரு இயக்குனரை நம்பி செல்கிறோம் என்றால் முதலில் சொன்ன நேரத்தில் படத்தை எடுக்க வேண்டும்.
அதற்கு முதலில் இயக்குனர் சொன்ன நேரத்திற்கு வர வேண்டும். அப்போதுதான் மற்ற நடிகர்கள் வருவார்கள். இதனால் நடிகர்களின் நேரம் வீணடிக்கப்படாது. சொன்ன நேரத்தில் படம் ரிலீசாகும். இவை அனைத்தையும் ஒரு மனிதன் இத்தனை ஆண்டுகளாக பண்ணும்போதும் எப்படி நடிகர்கள் சரியான நேரத்திற்கு வராமல் இருப்பார்கள்' என்றார்.