
சென்னை,
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள் 'தமிழ் வார விழா' நிறைவு விழா முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (திங்கள் கிழமை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சரால் கடந்த மாதம் 22.4.2025 அன்று சட்டமன்றத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ், 'பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்' எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை, கலை பண்பாட்டுத்துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து இத்திட்டத்தினை 29.4.2025 முதல் 5.5.2025 வரை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கவியரங்கங்கள், இலக்கிய கருத்தரங்குகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ் வார விழாவின் நிறைவு விழா நாளை (5.5.2025) அன்று காலை 10.30 மணியளவில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளார்கள். இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த விழாவில் தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியதன் தொடர்பாக அவர்களின் குடும்பத்தினருக்குப் பரிவுத் தொகையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்ற உள்ளார்.