அம்பை: மணிமுத்தாறு அருகே கோயில் வளாகத்தில் கரடி நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கரடியை மீண்டும் வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் உள்ள கிராமங்களில் அவ்வப்போது மிளா, காட்டுப்பன்றி, யானை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் இரவு நேரங்களில் அடிக்கடி சுற்றித்திரிவது வழக்கமாகிவிட்டது. அந்தவகையில் மணிமுத்தாறு அருகே அண்ணாநகர் பகுதியிலுள்ள தங்கம்மன் கோயிலில் கரடி ஒன்று கோயில் வளாகத்தில் உள்ளேயே நுழைந்து சுற்றித் திரிந்தது.
அங்கு தீபம் ஏற்றும்பொருட்டு வைக்கப்பட்டிருந்த எண்ணெய், சாமிக்கு பூஜை செய்து படைக்கப்பட்டிருந்த சர்க்கரை பொங்கல், பழம் போன்ற பிரசாதங்களை தின்றதுடன் தொடர்ந்து கோயில் வளாகம் மற்றும் கோயிலுக்கு வெளியே சுற்றித்திரிந்தது. இதைப் பார்த்து பதறிய அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதேபோன்று கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனி பகுதி அக்னி சாஸ்தா கோயில் வளாகத்தில் கரடி ஒன்று அடிக்கடி நடமாடியதை அடுத்து கரடியை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிமுத்தாறு அண்ணாநகர் பகுதியிலும் கரடி நடமாட்டம் குறித்து தகவலறிந்த அம்பை வனத்துறையினர் உடனடியாக கோயில் பகுதியில் முகாமிட்டுள்ளதோடு கரடியின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அத்துடன் அதை காட்டுக்குள் திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் கரடி நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், இவ்வாறு வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை வனத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மணிமுத்தாறு அருகே கோயில் வளாகத்தில் சுற்றித்திரியும் கரடி appeared first on Dinakaran.