மணிமங்கலத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல்: குடிமகன்கள் புலம்பல்

2 months ago 21

ஸ்ரீபெரும்புதூர்: மணிமங்கலத்தில் செயல்பட்டு வரும், டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குடிமகன்கள் புலம்பி வருகின்றனர். தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் சார்பில், டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் பல நூறு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி தருகின்ற இந்த டாஸ்மாக் கடையில், ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட, மதுபாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையில் கூடுதலாக பணம் வசூலித்து வருவதாக குற்றசாட்டு மீண்டும் எழுந்துள்ளது.

இதனால், மதுபிரியர்கள் அவதிக்குள்ளாகி வருவது தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில் தாம்பரம் அருகே மணிமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதுப்பிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: டாஸ்மாக் கடை மூலம் மாநிலம் முழுவதும் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உழைத்த களைப்பை போக்குவதற்காக கூலித் தொழிலாளர்கள், இளைஞர்கள் தங்களின் பொழுது போக்கிற்காக மதுபானத்தை நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், கடைக்கு வருகின்ற கூலித்தொழிலாளர்களிடம் விற்பனையாளர்கள் பாட்டில் ஒன்றிற்கு 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் வீதமும், உயர்ரக மதுபாட்டில்களுக்கு 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை தரத்திற்கு தகுந்தாற்போல் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருகின்றனர்.  அந்த வகையில், மணிமங்கலம் டாஸ்மாக் கடைக்கு மட்டும் நாளொன்றுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையில் வருமானம் ஈட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால், மதுப்பிரியர்களுக்கு மாதந்தோறும் கூடுதல் தொகை செலவாகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அரசு மீது அதிருப்தி நிலவி வருவதுடன், அவ்வப்போது மதுப்பிரியர்களுக்கும், டாஸ்மாக் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது மீறி வசூலித்தால் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.

மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகலிலும் மதுபானங்களின் விலை பட்டியல் ஒட்ட வேண்டும் என்று அறிவிக்கபட்டது.ஆனால் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து கடைகளிலும் மதுபாட்டில்கள் விலையை விட கூடுதலாக வசூலிப்பது தொடர் கதையாகி உள்ளது. மணிமங்கலம் டாஸ்மாக் கடையில் மட்டும் லட்சங்களில் சம்பாதிக்கும் ஊழியர்கள், நடுத்தர மற்றும் ஏழை கூலி வேலை செய்பவர்கள் மீது கூடுதல் சுமை வைப்பதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* ரவுடிகள் மிரட்டல்
மணிமங்கலம் டாஸ்மாக் கடையில் 4 விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியில் உள்ளனர். இந்த கடைக்கு எப்போதும் கூட்டம் அலைமோதும். பாட்டிலுக்கு கூடிதலாக பணம் வசூலிப்பதால், தினந்தோறும் வாக்குவாதம், தகராறு நடைபெற்று வருகிறது. இதனால், அதே பகுதியை சேர்ந்த சில அட்டகத்தி ரவுடிகளை தங்கள் பாதுகாப்பிற்கு விற்பனையாளர்கள் டாஸ்மாக் வாசலில் நிறுத்தி வைத்துள்ளனர். தகரற்றில் ஈடுபடுபவர்களை அட்டகத்தி ரவுடிகள் மிரட்டி அனுப்பி வைக்கும் சம்பவம் நடந்தேறி வருகிறது.

* கடைக்கு வருகின்ற கூலித்தொழிலாளர்களிடம் விற்பனையாளர்கள் பாட்டில் ஒன்றிற்கு 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் வீதமும், உயர்ரக மதுபாட்டில்களுக்கு 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையும் தரத்திற்கு தகுந்தாற்போல் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

The post மணிமங்கலத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல்: குடிமகன்கள் புலம்பல் appeared first on Dinakaran.

Read Entire Article