
இம்பால்,
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அதேவேளை, கடந்த சில மாதங்களாக மோதல் சற்று தணிந்திருந்த நிலையில் தற்போது மோதல் மீண்டும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் இளம்பெண் பயங்கரவாதிகளால் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டார். வீடுகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
இதையடுத்து, பாதுகாப்புப்படையினர், போலீசார் நேற்று நடத்திய அதிரடி என்கவுன்டரில் குகி பயங்கரவாதிகள் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தை சேர்ந்த 3 பெண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேரை குகி பயங்கரவாதிகள் இன்று கடத்திச்சென்றனர். 60, 31, 25 ஆகிய வயதுகளை சேர்ந்த 3 பெண்களையும், 3 குழந்தைகளையும் பயங்கரவாதிகள் கடத்திச்சென்றன. கடத்தப்பட்டவர்களில் 6 மாத குழந்தையும் அடக்கம். அதேவேளை, மெய்தி சமூகத்தை சேர்ந்த 2 ஆண்களை (வயது 76, 54) குகி பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்துக்கொன்றுள்ளனர். இந்த சம்பவங்களால் ஜிரிபாம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது