மணிப்பூரில் வன்முறை: இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு - மக்கள் மனநிலை என்ன..?

13 hours ago 1

இம்பால்,

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அரங்கேற்றிய கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் வீடியோக்களாக வெளியாகி நாட்டையே உலுக்கியது.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய பாலியல் குற்றங்கள் தேசத்தை தலைகுணிய வைத்தன. மணிப்பூரில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு, கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த கலவரத்தில் 250-க்கும் அதிகமானோர் பலியான நிலையில், வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையில், மணிப்பூர் முதல்-மந்திரியாக இருந்து வந்த பைரேன் சிங் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மணிப்பூரில் பதற்றத்தை தணிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. நீண்ட காலமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணைய சேவை தடை செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இத்தகைய முயற்சிகளால் படிப்படியாக மணிப்பூரில் அமைதி திரும்பினாலும், அவ்வப்போது சில மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

மலைவாழ் குக்கி இன மக்கள் தங்களுக்கு தனி நிர்வாகம் வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. அதே சமயம், இம்பால் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி இன மக்கள், தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மணிப்பூரில் வன்முறை வெடித்து இன்றோடு 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. இருப்பினும் வன்முறையால் ஏற்பட்ட சுவடுகள் இன்னும் நீங்கவில்லை. வன்முறையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணிப்பூரில் பல்வேறு குழுக்கள் சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மணிப்பூரில் இன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலைகள், வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி இயல்பு வாழ்க்கை வாழும் நாளுக்காக ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

Read Entire Article