மணிப்பூரில் பயங்கர மோதல் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி: 5 மாவட்டங்களில் பந்த்

1 hour ago 2

இம்பால்: மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து பதற்றத்திலேயே இருந்து வருகிறது. அங்கு அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. நேற்று உக்ருல் நகரில் உள்ள நிலத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரு குழுக்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இதில் சூரசந்த்பூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் நகர கமாண்டர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்கள் வொரின்மி தும்ரா, ரெய்லிவுங் ஹாங்க்ரே மற்றும் சைலாஸ் சிங்காய் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் சடலங்களை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீசார் வைத்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இரு குழுக்களும் நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் படைகள் மாவட்டத்திற்கு விரைந்துள்ளன. மணிப்பூரின் தவ்பால் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு வாலிபர்கள் திங்களன்று இரவு விடுவிக்கப்படுவார்கள் என்று மாநில அரசு உறுதியளித்திருந்தது. ஆனால் வாலிபர்கள் தீவிரவாதிகளிடம் இருந்து இன்னும் மீட்கப்படவில்லை. இதை கண்டித்து இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்னுபூர், காங்சிங் மற்றும் தவ்பால் மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். முழு அடைப்பு போராட்டமும் நடந்தது. இதனால் 5 மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

The post மணிப்பூரில் பயங்கர மோதல் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி: 5 மாவட்டங்களில் பந்த் appeared first on Dinakaran.

Read Entire Article