இம்பால்: மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு குழுவானது வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘மணிப்பூரில் பாஜவுக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும், ஒன்றிய அரசானது திடீரென குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியுள்ளது. இது நியாயமற்றதாகவும், மணிப்பூரை மேலும் கொந்தளிப்பில் தள்ளுவதற்கான ஒரு திட்டமிடப்பட்ட சூழ்ச்சியாக கருதப்படுகின்றது. இந்த நடவடிக்கை ஒன்றிய அரசின் உண்மையான நோக்கங்கள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றது.
ஏனெனில் இது உண்மையான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக அதன் சொந்த பாஜ எம்எல்ஏக்களின் திறமையின்மை மீது பழியை மாற்றுகின்றது. குறிப்பாக சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக மக்களுக்கு எந்த சரியான விளக்கமும் இல்லாமல் முதல்வரை கட்டாய ராஜினாமா செய்ய வைத்தது ஜனநாயக கொள்கைகளுக்கு முற்றிலும் செய்யப்பட்ட துரோகமாகும்.
இந்த அதிகார சூழ்ச்சியானது மணிப்பூரை, குறிப்பாக மெய்பீஸ் சமூகத்தை நேரடியாக ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கான திட்டமிடலை குறிக்கிறது. ஜனநாயகத்துக்கு விரோதமாக குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது துரதிர்ஷ்டவசமானது. விரைவில் புதிய தலைவரை தேர்ந்தெடுத்து அரசை மீட்டெடுப்பதற்கான விரைவான நடவடிக்கை தேவையாகும்” என்று குறிப்பிட்டுள்ளது.
* பாஜ தான் பொறுப்பு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில்,‘‘மணிப்பூரில் அரசியல் நெருக்கடி நிலவுகின்றது. அதனால் தான் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நரேந்திரமோடி ஜீ 11 ஆண்டுகளாக ஒன்றிய அரசாக இருப்பது உங்கள் கட்சி தான். 8 ஆண்டுகளாக மணிப்பூரை ஆட்சி செய்து வந்தது உங்கள் கட்சி தான்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு பாஜ தான். தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை ரோந்துக்கு உங்கள் அரசு தான் பொறுப்பு. குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது உங்கள் சொந்த கட்சியின் அரசை சஸ்பெண்ட் செய்தது, மணிப்பூர் மக்களை நீங்கள் எவ்வாறு தோல்வியடைய செய்தீர்கள் என்பதற்கான நேரடி ஒப்புதலாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
The post மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி துரதிர்ஷ்டவசமானது: மெய்தி ஒருங்கிணைப்பு குழு விமர்சனம் appeared first on Dinakaran.