இம்பால்,
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில், அமைதியை நிலைநாட்டவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்திய ராணுவத்தின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மணிப்பூரில் உள்ள கிராம மக்களின் நலனுக்காக இந்திய ராணுவத்தின் சார்பில் 2 நாட்கள் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இதன்படி பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கடந்த 29 மற்றும் 30-ந்தேதிகளில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுமார் 813 பேர் பலனடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ரத்த பரிசோதனைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மேலும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டன.
முன்னதாக அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்கள் நடத்தப்பட்ட மாபெரும் மருத்துவ முகாமில், சுமார் 6,750 பேர் பலனடைந்தனர். இந்த மருத்துவ முகாம்கள் மக்களின் உடல்நலத்திற்காக மட்டுமின்றி, வீடுகளை இழந்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், ஊக்கம் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்திலும் நடத்தப்படுவதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.