இம்பால்,
மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 20 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது.
இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் தவுபல் மாவட்டங்களில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த 9 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இம்பால் கிழக்கு மாவட்டத்தின் மந்திரிபுக்ரி தாகுர்பாரி பகுதியில் காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 பேரை நேற்று பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 மி.மீ பிஸ்டல், இரண்டு கைக்குண்டுகள், தோட்டாக்கள் மற்றும் 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல, இம்பால் மேற்கு, காக்சிங், காக்லீபாக் மற்றும் தவுபல் மாவட்டங்களில் தலா ஒருவரை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர் என்றார்.