திருவொற்றியூர்: மணலியில் பெஞ்சல் புயலால் சாய்ந்த 40 அடி உயர ஆலமரம் மீண்டும் மறு நடவு முறையில் மாநகராட்சியால் நடவு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 22வது வார்டு, சின்னசேக்காடு, கக்கன்புரம் பகுதியில் 100 வருடங்கள் பழமையான ஆலமரம் உள்ளது. கடந்த வாரம் பெஞ்சல் புயல் காரணமாக இந்த ஆலமரம் முறிந்து கீழே சரிந்தது. பழமையான மரம் என்பதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் வருத்தமடைந்தனர். எனவே, மறு நடவு முறையில் ஆலமரத்தை மீண்டும் நட்டு வைக்க, சென்னை மாநகராட்சி பூங்கா துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இதன்படி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், கவுன்சிலர் தீர்த்தி, பூங்கா துறை கண்காணிப்பாளர் சுதா மேற்பார்வையாளர் ஆர்.வெங்கடாச்சலம், உதவி பொறியாளர் மைதிலி ஆகியோர் கொண்ட குழுவினர், சரிந்து கிடந்த 40 அடி உயரம் கொண்ட ஆலமரத்தை 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மீண்டும் தூக்கி நிறுத்தி மண்ணில் புதைத்து நட்டனர். இதுபோல் மறு நடவு முறையில் கீழே சாய்ந்த பழமையான மரங்களை நட்டு வெற்றி கண்டுள்ளதால் இந்த மரமும் மீண்டும் வளரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மறு நடவு முறையை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
The post மணலியில் புயல் மழையால் சாய்ந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம் மீண்டும் நடவு செய்யப்பட்டது appeared first on Dinakaran.