மணலி மண்டலம் பிரிக்கப்படுவதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்: பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் கவலை

6 hours ago 3

திருவொற்றியூர்: மணலி மண்டலத்தை பிரிக்கும் நிர்வாக நடவடிக்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் வடக்கு பகுதியான மணலி மண்டலம் 15, 16, 17, 18, 19, 20,21, 22 ஆகிய 8 வார்டுகளை உள்ளடக்கியது. சுமார் 42.24 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மண்டலத்தில் கொசஸ்தலை ஆறு, கடப்பாக்கம் ஏரி, சடையன்குப்பம் ஏரி, மணலி ஏரி, என ஆறு, ஏரி, குளம், குட்டைகள், மற்றும் உபரி நீர் கால்வாய் போன்ற சென்னையிலேயே அதிகப்படியான நீர்நிலைகள் உள்ளன. அதுமட்டுமின்றி இப்பகுதியில் அபாயகரமான தொழிற்சாலைகளும் அதிகப்படியாக உள்ளன. புயல், மழை பேரிடர் காலங்களில் மணலி மண்டலத்துக்கு உட்பட்ட பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக இருந்ததால், கடந்த 2011ம் ஆண்டு சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது பொதுமக்கள் நலன் கருதி குறைந்த அளவில் 8 வார்டுகளுடன் சிறப்பு நிலை மண்டலமாக மணலி மண்டலம் செயல்படும் வகையில் நிர்வாக எல்லைகள் அமைக்கப்பட்டன.

இந்த மண்டலத்தில் 1.02 லட்சம் மக்கள் தொகை என குறைவாக இருந்தாலும் மற்ற மண்டலங்களை காட்டிலும், பரப்பளவில் மிகவும் பெரியதாகவே இருந்தது. இந்தநிலையில் சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை, 15ல் இருந்து 20ஆக உயர்த்தப்பட்டு, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மணலி மண்டலத்தில் உள்ள, 15, 16, 18, 20, 21 ஆகிய ஐந்து வார்டுகள் திருவொற்றியூர் மண்டலத்திலும் 17, 19, 22 ஆகிய மூன்று வார்டுகள் மாதவரம் மண்டலத்திலும் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாற்றம் செய்த காரணமாக கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 14 ஆண்டுகள் எட்டு வார்டுகளுடன் தனி மண்டலமாக செயல்பட்டு வந்த மணலி மண்டலம் இல்லாமல் போவதோடு, சென்னை மாநகராட்சி எல்லையில் 19 வார்டுகளுடன் அதிக வார்டுகளை கொண்ட மண்டலமாக திருவொற்றியூர் மண்டலம் 1 மாறியுள்ளது.

இவ்வாறு மணலி மண்டலத்தின் தனி நிர்வாகத்தை பிரித்து மற்ற மண்டலங்களுடன் சேர்ப்பதால் பேரிடர் காலங்களில் மணலி புதுநகர், சடையங்குப்பம் பர்மா நகர், ஆண்டார் குப்பம், அரியலூர், கடப்பாக்கம் போன்ற பகுதிகளில் மீட்பு பணியை மேற்கொள்வதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதிலும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பெரும் சிரமமும், சிக்கலும், பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படும் என மணலி சேக்காடு பொதுவியாபாரிகள் சங்கம், குடியிருப்போர் நல சங்கம், வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்வேறு கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மணலி மண்டலத்தில் உள்ள வார்டுகள் திருவொற்றியூர் மற்றும் மாதவரத்தில் இணைக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டிருந்தாலும் தற்போது இது எப்போது முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்பதில் குழப்பம் இருந்து வருகிறது. இந்தநிலையில் விரைவில் சென்னை மாநகராட்சியில் இதற்கான கூட்டம் நடைபெற உள்ளது என்றும், அதன்பிறகு தெளிவான முடிவு தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. இதில் மணலி மண்டலத்தில் உள்ள 17, 18, 21 ஆகிய 3 வார்டுகளின் அதிமுக கவுன்சிலர்கள் முல்லை ராஜேஷ்சேகர், தர், ஜெய்சங்கர் ஆகியோர் மணலி மண்டலத்தை பிரிக்காமல் எப்பொழுதும்போல் மணலி மண்டலமாகவே இயங்க வேண்டும் எனவும், மணலி மண்டலத்தை பிரிப்பது தொடர்பான அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரி சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

பல்வேறு சிரமம் ஏற்படும்
மணலி மண்டலத்தில் இருந்து பொன்னேரி, மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட 15 மற்றும் 16வது வார்டுகளை, திருவொற்றியூர் மண்டலத்திலும், திருவொற்றியூர் தொகுதியின், 22வது வார்டு மாதவரம் மண்டலத்திலும் இணைத்திருப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு இணைக்கப்பட்டிருப்பது முரண்பாடாக உள்ளது என்றும், வார்டுகளில் நிர்வாக செயல்பாடுகளும், பொதுமக்கள் மண்டல அதிகாரிகளை அணுகுவதில் பல்வேறு சிரமங்களும், பிரச்சனைகளும் ஏற்படும் என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த மாற்றம் காரணமாக 14 ஆண்டாக செயல்பட்டு வந்த மணலி மண்டலம் இல்லாமல் போவதோடு, மாநகராட்சி எல்லையில் 19 வார்டுகளுடன் அதிக வார்டுகளை கொண்ட மண்டலமாக திருவொற்றியூர் மண்டலம் 1 மாறியுள்ளது.

The post மணலி மண்டலம் பிரிக்கப்படுவதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்: பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் கவலை appeared first on Dinakaran.

Read Entire Article