திருவொற்றியூர்: மணலி மண்டலம் 15வது வார்டு மணலி புதுநகர், 80 அடி சாலையில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை இல்லாததால் இடநெருக்கடியில் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.1.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வகுப்பறை கட்டிட பணிகள் தொடங்கப்பட்டன.
முதல் தளத்துடன், 6 வகுப்பறைகள் மற்றும் அனைத்து வசதிகள் கொண்ட புதிய பள்ளி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை, மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) தேவேந்திரன் தலைமையில் உதவி பொறியாளர் சோமசுந்தர்ராஜ் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பள்ளி கட்டுமான பணிகள் ஓரிரு மாதங்களில் முடிக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மணலி புதுநகர் அரசு பள்ளியில் ரூ.1.74 கோடியில் புதிய வகுப்பறை appeared first on Dinakaran.