சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: தமிழக அரசு

5 hours ago 2


சென்னை: சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார். தங்க நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை செய்தபோது அஜித் மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது.

உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜித் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே, போலீசார் கடுமையாக தாக்கியதால்தான் அஜித் உயிரிழந்ததாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரின் உறவினர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசார் என்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகங்கை திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் லாக்கப் மரணத்தை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி சந்தீஷ் கூடுதல் பொறுப்பாக சிவகங்கை எஸ்.பி.பொறுப்பை கவனிப்பார் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

The post சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: தமிழக அரசு appeared first on Dinakaran.

Read Entire Article