திருவொற்றியூர்: மணலி அருகே பயோ காஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இயந்திரம் வெடித்து இன்ஜினியர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலம், 22வது வார்டுக்கு உட்பட்ட பல்ஜிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பயோ காஸ் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை மேற்பார்வையில் இந்த நிறுவனம் செயல்படுகிறது.
சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் உணவு கழிவுகள் இங்கு கொண்டு வரப்பட்டு, அதிலிருந்து பயோ காஸ் தயாரித்து மணலியில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பங்க்குகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், இன்ஜினியராக பணிபுரியும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார் (25), லாரி டிரைவராக பணிபுரியும் பொன்னேரியை சேர்ந்த பாஸ்கர் (25) ஆகிய இருவரும், நேற்று முன்தினம் இரவு, நிறுவனத்தின் மையப் பகுதியில் உள்ள காஸ் சுத்திகரிப்பு கட்டுப்பாட்டு அறையில் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இரவு 10.30 மணிக்கு இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்த இயந்திரம் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. .இதில் கட்டுப்பாட்டு அறை முழுவதும் இடிந்து, உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த சரவணகுமார், பாஸ்கர் ஆகியோர் மீது கட்டிட கழிவு விழுந்தது. இந்த வெடிச்சத்தம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டதால் சின்ன சேக்காடு, பல்ஜிபாளையம், பெரிய சேக்காடு உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என்ன வெடிச்சத்தம் என்று புரியாமல் வீடுகளில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் பயோ காஸ் நிறுவனத்தில் இருந்து வெடி சத்தம் வந்தது என கேள்விப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயோ காஸ் நிறுவனத்தை நோக்கி படையெடுத்தனர். தகவலறிந்த மணலி போலீசார் மற்றும் மணலி எண்ணூர் பல்வேறு பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், சிறப்பு மீட்பு குழுவினர் என 50க்கும் மேற்பட்டோர் பயோ காஸ் நிறுவனத்தின் உள்ளே சென்று, கட்டிட இடிபாடுகளில் சிக்கி, பலத்த காயங்களுடன் இருந்த பாஸ்கரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சரவணகுமார் மீது கான்கிரீட் தூண்கள் விழுந்ததால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் 3 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்து, 2 மணி நேரம் போராடி சரவணகுமாரை சடலமாக மீட்டனர். பின்னர், மணலி போலீசார், சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, கட்டுப்பாட்டு அறையில் இருந்த இயந்திரம் எதனால் வெடித்தது என விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் ஏராளமான காஸ் நிரப்பப்பட்ட டேங்க்குகளும் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கட்டுப்பாட்டு அறையில் மின் சாதன இயந்திரம் வெடித்ததில் அதிர்ஷ்டவசமாக பக்கத்தில் இருந்த ராட்சத டேங்க்குகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அவை வெடித்திருந்தால் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு அருகில் உள்ள சிபிசிஎல், எம்எப்எல் போன்ற பல தொழிற்சாலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதோடு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றளவுக்கு குடியிருப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
இதனிடையே, எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், துணை மேயர் மகேஷ்குமார், மண்டல குழு தலைவர்கள் நந்தகோபால், ஏ.வி.ஆறுமுகம், மாநகராட்சி உயரதிகாரிகள், கவுன்சிலர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் மாநகராட்சி செயற்பொறியாளர் தேவேந்திரன் தலைமையில் அதிகாரிகள் விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
* உரிய விசாரணை
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘விபத்து ஏற்பட்ட கட்டுப்பாட்டு அறை முழுவதுமாக கான்கிரீட் கட்டிடம். இதன் உள்ளே இருக்கக்கூடிய கட்டுப்பட்டு கருவிகள் பெரும்பாலும் மெல்லிய இரும்பு தகடுகளால் ஆனவை. இந்த கட்டுப்பாட்டு கருவி வெடித்ததால் பலம் வாய்ந்த தூண்களும், கான்கிரீட் தளமும் வெடித்து சிதறியது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அறை முழுவதும் ஏற்கனவே காஸ் நிரம்பி இருக்கவேண்டும். அப்போது மின்சாதனத்தில் ஏற்பட்ட மின் கசிவால் இயந்திரம் வெடித்து சிதறி இருக்கலாம். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
The post மணலி அருகே நள்ளிரவு பரபரப்பு பயோ காஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இயந்திரம் வெடித்து இன்ஜினியர் பலி: மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.