மடங்களில் தக்கார் நியமனம் விவகாரம்.. ஈக்வடாரில் உள்ள நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!

2 hours ago 1

சென்னை: நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார் நித்தியானந்தா தற்போது கைலாசா நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், கைலாசா நாடு எங்கு இருக்கிறது; நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது தற்போது வரையில் புரியாத புதிராகவே இருந்து வந்தது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நான்கு மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்து மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார்.

இது சம்பந்தமாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆத்மானந்தா மறைந்ததை அடுத்து, பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், நான்கு மடங்களையும் நிர்வகிக்க, தக்கார் நியமித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து வெளிநாட்டிற்கு தப்பித்துச் சென்ற நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மடங்களை நிர்வகிக்க தக்கார் நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நித்தியானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கிறார், என்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, இந்தியாவிலேயே இல்லாத நித்யானந்தாவின் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். முன்னதாக நித்யானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா என்றாலே பிரச்சினையாக இருக்கிறது என்று சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

The post மடங்களில் தக்கார் நியமனம் விவகாரம்.. ஈக்வடாரில் உள்ள நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!! appeared first on Dinakaran.

Read Entire Article