மஞ்சூர்,ஜன.12: மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலில் ஈடுபட்ட காட்டுமாடுகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மெரிலேண்டு, மைனலாமட்டம், சாம்ராஜ் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிலும் அடர்ந்த காடுகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் சூழ்ந்துள்ளது.இதனால் வன விலங்குகளின் நடமாட்டம் இப்பகுதிகளில் அதிகமாக உள்ளது. குறிப்பாக காட்டுமாடுகள் அதிகளவில் உள்ளது.
சமீபகாலமாக பகல் நேரங்களிலேயே மெரிலேண்டு,சாம்ராஜ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டுமாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுவதை காணலாம். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை மஞ்சூர் மேல்குந்தா செல்லும் சாலையோர தேயிலை தோட்டத்தில் சுமார் 10கும் மேற்பட்ட காட்டுமாடுகள் தேயிலை தோட்டத்தில் சாவகாசமாக மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தது.
இந்த கூட்டத்தில் கன்றுகுட்டிகளும் காணப்பட்டது.
இந்நிலையில் அவ்வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டத்தில் கூட்டமாக காணப்பட்ட காட்டு மாடுகளை கண்டு தங்களது வாகனங்களை நிறுத்தினார்கள். தொடர்ந்து மேய்ச்சலில் ஈடுபட்ட காட்டுமாடுகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் பலர் அவற்றை புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வங்காட்டினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேய்ச்சலில் ஈடுபட்ட காட்டுமாடுகள் பின்னர் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
The post மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டுமாடுகள் முகாம் appeared first on Dinakaran.