மஞ்சள்நோய் தாக்குதலால் போதிய கரும்புகள் இன்றி வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மூடல்: வருவாய் இழப்பால் விவசாயிகள் கவலை

1 month ago 13


கேள்விக்குறியாகும் கரும்பு சாகுபடி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மஞ்சள் நோய் தாக்குதலால் போதிய கரும்புகள் இன்றி வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலூகா மாகாளிபுரம், வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, சோமேஸ்வரபுரம், மணலுார், கணபதி அக்ரகாரம், உள்ளிக்கடை உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்காகவும், வெல்லம் காய்ச்சுவதற்காகவும் இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வந்தனர். இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் நூற்றுக்கணக்கான ஆலைகளில் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடவு மற்றும் மறுதாம்பு கரும்பு பயிர்களில் ஒரு சில வயல்களில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டது.

இந்த நோய் வேகமாக பரவி அடுத்தடுத்த கரும்பு வயல்களிலும் பரவியது. இதைப்போல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பெரும்பாலான வயல்களிலும் புதிய வகை மஞ்சள் நோய் பரவியது. இந்த நோய் தாக்குதலால் கரும்புகள் வளர்ச்சி இல்லாமல் அப்படியே குத்தாக நின்று போய் விட்டது. இயற்கை, செயற்கை பூச்சிக்கொல்லிகளை தெளித்தும் இந்த நோயை குணப்படுத்த முடியவில்லை. இதனால் லட்சக்கணக்கில் செலவு செய்து கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்தனர். கரும்பு சாகுபடியில் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதால் கரும்பு விவசாயத்தை கைவிட்ட பெரும்பாலான விவசாயிகள், வாழை உள்ளிட்ட மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கி விட்டனர். ஒரு சில விவசாயிகள் மட்டும் எள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் மஞ்சள் நோய் தாக்குதல் தொடர்வதால் அவர்களும் கரும்பு விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் நிலையில் இப்பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பெரும்பலான ஆலைகள் மூடிகிடக்கின்றன. எனவே கசந்து போன கரும்பு விவசாயம் மீண்டும் இனிக்குமா? என விவசாயிகள் கவலையுடன் காத்து கிடக்கின்றனர். இதுகுறித்து மாகாளிபுரம் கிராமத்தை சேர்ந்த கரும்பு சாகுபடி விவசாயிகள் கூறியதாவது: இந்த பகுதியில் ஆண்டாண்டு காலமாக கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். இங்கு அறுவடை செய்யும் கரும்பை கொண்டு நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை தயார் செய்கிறோம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்த கரும்பிலும், மறுதாம்பு கரும்பிலும் திடீரென மஞ்சள் பட்டு, கரும்பு வளர்ச்சி இல்லாமல் அப்படியே நின்று விட்டது. இந்த நோய் வேகமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு பயிர்களில் பரவியது. இதனால் எங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வங்கிகளிடமும், தனியாரிடமும் வாங்கிய கடனை கூட மீண்டும் திரும்ப செலுத்த இயலாமல் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். இதனால் இப்பகுதியில் கரும்பு விவசாயத்தை கைவிட்ட ஒரு சில விவசாயிகள் மாற்று பயிர்களுக்கு மாறினாலும், மீதி உள்ள விவசாயிகள் அடுத்து என்ன பயிர் செய்வது? என்று தெரியாமல் கலங்கி போய் உள்ளோம். பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் நிலையிலும் போதிய கரும்பு இல்லாததால் இப்பகுதியில் செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மூடி கிடக்கின்றன. எனவே அரசு, வேளாண்மை விஞ்ஞானிகள் மஞ்சள் நோய் பாதிக்கப்பட்ட வயல்களையும், பயிர்களையும் பரிசோதனை செய்து விவசாயிகளுக்கு தக்க ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

நோய் தாக்காத விதை கரணைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதோடு, கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு ஊக்க தொகையும் வழங்க வேண்டும். இதேநிலை தொடர்ந்தால் இப்பகுதியில் கரும்பு விவசாயம் கேள்வி குறியாவதோடு, பொது மக்கள் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரையின் தேவைக்கு வெளி மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும் என்றனர்.

The post மஞ்சள்நோய் தாக்குதலால் போதிய கரும்புகள் இன்றி வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மூடல்: வருவாய் இழப்பால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Read Entire Article