புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ஆளுநர் சட்டவிரோதமாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த 10 மசோதாவுக்கும் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் அதிரடியாக ஒப்புதல் அளித்தனர். அமைச்சரவை அறிவுரையின்படி மட்டும் தான் மாநில ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாக செயல்பட அவருக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுடன் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருகிறார். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அபிஷேக் மனு சிங்வி, வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் வாதத்தில்,‘‘ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பிறகு அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்று அரசியல் சாசன பிரிவு 200 கூறுகிறது. மசோதாக்களை நிறுத்தி வைக்கும் வகையில் நான்காவதாக முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்ற ஒன்றிய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். அப்படி அரசியல் சாசனம் கூறவில்லை என முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக தெரிவித்துள்ளது. குறிப்பாக அமைச்சரவை முடிவின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும். அப்படி தான் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனிப்பட்ட எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது
குறிப்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த விவகாரங்களில் அரசியல் சாசனத்தின்படி ஆளுநர் செயல்படாததால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய பத்து பல்கலைக்கழக மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தாமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து ஆளுநர் தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் அட்டெர்னி ஜெனரல் ஆர்.வெங்கெட்ரமணி, ‘‘இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் ஆளுநருக்கு என்று தனிப்பட்ட அதிகாரம் உண்டு. குறிப்பாக அரசியல் சாசன பிரிவு 200ல் குறிப்பிடப்பட்டுள்ள விருப்புரிமை என்ற வார்த்தை ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தை பிரதிபலிக்கிறது. அதன் அடிப்படையில் சட்டபேரவையின் நடவடிக்கையின் படி ஆளுநர் செயல்பட வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு மசோதா மீதான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டால், அந்த மசோதா செயலிழந்து விட்டது என்று தான் அர்த்தம். அதற்கு என்று தனிப்பட்ட முறையில் விளக்கம் அளிக்க தேவையில்லை. அதேப்போன்று காலாவதியான மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தால், அதற்கு மீண்டும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. இருப்பினும் அதுபோன்ற மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். அதற்கான அரசியல் சாசன அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.
ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்துவிட்டால் அரசியல் சாசன பிரிவு 200ன் செயல்பாடு என்பது முடிந்து விட்டது ஆகும். இதையடுத்து குறிப்பிட்ட அந்த மசோதா விவகாரத்தில் குடியரசுத் தலைவர் அதிகாரமான அரசியல் சாசன பிரிவு 201 செயல்பாட்டுக்கு அது வந்துவிடும். இதில் குடியரசுத் தலைவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அதனை நிறுத்தி வைக்கிறார் என்று வைத்துக் கொண்டால், அது அரசியல் சாசன பிரிவு 254ன் படி மாநில சட்டம் என்பது ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராகவோ அல்லது முரணாகவோ இருக்கிறது என்று அர்த்தமாகும் என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்க்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி ஒத்திவைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் என்பவர் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 200ன்படி செயல்பட வேண்டும். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா மாநிலத்தின் சட்டபேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2வது முறையாக தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தது சட்டவிரோதம் ஆகும். மேலும் குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை அனுப்பி வைப்பதற்கு முன்னதாக தனக்கான அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தி இருக்க வேண்டும். எந்தவித காரணங்களையும் கூறாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்தது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமில்லாமல், அது தவறான ஒன்றாகும். அதேப்போன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் கிடையாது என்பதை ஆளுநர் தவறாக பயன்படுத்தக் கூடாது. இதுகுறித்து பஞ்சாப் மாநில வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவை அனுப்பி வைக்கும் மசோதாக்களின் மீது அரசியல் சாசனம் வழங்காத அதிகாரங்களை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர் அதிகப்படியாக மூன்று மாதத்தில் மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். கூடிய விரைவில் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆளுநர் செயல்படக் கூடாது.
குறிப்பாக தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட பத்து மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தது என்பது சட்டவிரோதம் என்பது மட்டுமில்லாமல், அது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். குறிப்பாக ஆளுநருக்கு என்று வீட்டோ என்ற தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்பதை அவர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஆளுநர் என்பவர் மாநில அரசின் கொள்கை மற்றும் சட்டப்பேரவை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆவார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவை அறிவுரையின்படி மட்டும் தான் மாநில ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாக செயல்பட அவருக்கு அதிகாரம் கிடையாது.
மேலும் மசோதா மீண்டும் அதாவது இரண்டாவது முறையாக சட்டப்பேரவை மூலம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு அன்றைய தினமே ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் ஏற்புடையது கிடையாது. ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்.
குறிப்பாக மசோதாக்களின் சாராம்சம் முழுமையாக மாற்றப்பட்டு இருந்தாலோ அல்லது அதில் குளறுபடிகள் இருந்தாலும் அதுகுறித்து ஆளுநர் என்பவர் அரசின் விவரங்களை கேட்டு ஆலோசிக்க வேண்டும். அதில் திருப்தி இல்லை என்றால் மட்டும் தான் குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை ஆளுநர் அனுப்பி வைக்க முடியும். ஆனால் இந்த விவகாரத்தில் அதுபோன்ற செயல்பாடுகள் எதுவும் இல்லை என்பது வழக்கின் விசாரணையின் போது தெளிவாகியது.
குறிப்பாக சட்டப்பேரவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் எந்த வகையிலும் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது. அப்படி நடக்கும் பட்சத்தில் அதனை கண்டிப்பாக ஏற்க முடியாது. ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். மாநில அரசோடு இணைந்து தான் அவர் செயல்பட்டு நடக்க வேண்டும். எனவே தமிழ்நாடு சட்டப்பேரவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பத்து மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் அனைத்து நடவடிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரமான அரசியல் சாசன விதி 142ஐ பயன்படுத்தி ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது. அதில், ‘‘தமிழ்நாடு சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது எந்தவித முடிவும் எடுக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதப்படுத்தியது அல்லது செயல்படாமல் இருந்ததை உச்ச நீதிமன்றம் மிகவும் கண்டிக்கிறது. இதில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காத போதிலும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி குறிப்பாக பிரிவு 200இன் கீழ், சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பின்னர் ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுக்க முடியாது என்ற விதியின் அடிப்படையில், குறிப்பிட்ட பத்து மசோதாக்களுக்கும் ஆளுநர் முறையாக ஒப்புதல் வழங்கி விட்டது போன்றதாக கருதப்படும் என்றும், அதனால் அந்த மசோதாக்கள் அனைத்தும் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேறியதாக அர்த்தம் கொள்ளப்படும். இருப்பினும் இதே விவகாரத்தில் வேறு கோரிக்கை கொண்ட அதாவது பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர் நியமனம் தொடர்பான வழக்கு மட்டும் தனியாக உச்ச நீதிமன்றத்தின் தரப்பில் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தமிழ்நாடு சட்டப்பேரவை மூலம் அனுப்பி வைக்கப்பட்டு ஆளுநர் நடவடிக்கையால் கிடப்பில் போடப்பட்டு இருந்த பத்து மசோதாக்களுக்கும் தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த சட்டங்களின்படி பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
‘அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் செயல்படவேண்டும்’
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ஆளுநருக்கு என்று தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்பு என்று இருக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு அவர் செயல்பட வேண்டும். அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் அவர் செயல்பட முடியும். இந்த விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைகளில் நேர்மை இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. அவர் தான் எடுத்த பதவிப்பிரமாணத்தின்படி செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அது தற்போது கேள்வியாக உள்ளது. தனக்கான அதிகாரத்தை பயன்படித்தி செயல்பட ஆளுநர் ஆர்.என்.ரவி தவறி விட்டார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
எந்தெந்த மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பலாம்
நீதிபதிகள் கூறுகையில், ஆளுநருக்கு அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் மூன்று வாய்ப்புகள் மட்டும் தான் இருக்கிறது. அதாவது முதலில் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது மசோதாவை நிறுத்தி வைப்பது, மூன்றாவது அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது. இதைத்தவிர்த்து அவர் நீண்ட காலமாக மசோதாக்களை கிடப்பில் போட்டு தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது.மேலும் மசோதா விவகாரத்தை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு என்று தன்னிச்சையாக ஒதுக்க முடியாது. குறிப்பாக அரசியல் சாசன பிரிவு 200 அல்லது 31ஏ, 31சி ஆகியவை மசோதா விவகாரம் போன்றவற்றில் இரண்டாவது நிபந்தனையாகும். அங்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் நிபந்தனை என்பது முன்னோடியாகும் என்றனர்.
அம்பேத்கரை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்
சட்டப்பேரவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பத்து மசோதாக்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்த நடவடிக்கை முழுமையான விதிமுறை மீறல் என்பது மட்டுமல்லாமல், மிகப்பெரிய பிழையானதாகும். இப்படி வெளிப்படையான முறையில் கூறுவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என்பதுதான் உன்மையாகும். அதாவது ஒரு மாநில ஆளுநர் என்பவர் விழிப்புடன் இருக்க வேண்டுமே தவிர, அரசுக்கு தடையை ஏற்படுத்துபவராக இருக்கக் கூடாது என தெரிவித்த நீதிபதிகள், இறுதியாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மிக முக்கிய வாக்கியத்தை பதிவிட்டனர். அதில், ‘‘ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது மிக மோசமானதாகவே இருக்கும்’’ என்று சுட்டிக்காட்டினர்.
வரலாற்றில் முதல் முறையாக மசோதா மீது முடிவெடுக்க ஆளுநருக்கு கெடு
ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பின் போது குறிப்பிட்டதில், ‘‘மாநில சட்டப்பேரவையின் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது அல்லது நிறுத்தி வைத்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆளுநர் முடிவெடுத்து நடவடிக்கை மேற்கொண்டால், அதுகுறித்து ஒரு மாதத்திற்குள் அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். இல்லையென்றால் அரசால் அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் முரண்படுகிறார் என்றாலோ அல்லது மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தாலோ, மசோதாக்கள் சட்டப்பேரவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். அதை விடுத்து தனிப்பட்ட முறையில் மசோதாக்களை ஆண்டு கணக்கில் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்க முடியாது’’ என்று தெரிவித்தனர். மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதிக்கப்பட்டது இந்திய வரலாற்றதில் இதுவே முதல் முறையாகும்.
ஆளுநர்களுக்கு எச்சரிக்கை; கேரள முதல்வர் வரவேற்பு
கேரள முதல்வர் பினராயி விஜயன்; மசோதாக்களை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு ஆளுநர் காலதாமதம் செய்ததற்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, கூட்டாட்சிக் கொள்கைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களை மீண்டும் உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துகிறது, கடுமையான காலக்கெடுவை அமைக்கிறது மற்றும் மக்களின் விருப்பத்தைத் தடுக்கும் ஆளுநர்களின் அரசியல் தலையீடுகளுக்கு எதிராக வலுவான செய்தியை அனுப்புகிறது. ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காக கேரளாவின் நிலைப்பாடு மற்றும் நடந்து வரும் சட்டப் போராட்டத்தின் உறுதியான நிரூபணம் ஆகும்.
அமைச்சரவையின் ஆலோசனையின்படி ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது. சட்டமன்றத்தின் அதிகாரங்களை ஆளுநர்கள் அபகரிக்கும் போக்குக்கு எதிரான எச்சரிக்கையாகவும் இந்தத் தீர்ப்பு அமைகிறது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. கேரள சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் 23 மாதங்கள் வரை கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளன. இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தில் கேரளா ஈடுபட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, கேரளா எழுப்பிய இதுபோன்ற பிரச்சினைகளின் பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
வேந்தரானார் முதல்வர்
இதில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதால், குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன. இதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதாவது தமிழ்நாடு பல்கலை., சட்டத்திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் கவர்னருக்கு பதிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மசோதாக்களை நிறுத்திவைத்த ஆளுநரின் செயல் சட்டவிரோதம்; 10 மசோதாவுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல்: சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் அதிரடி appeared first on Dinakaran.