சென்னை: சென்னை தலைமைச் செயலக, சட்டப் பேரவை வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியாவில் முதல்முறையாக ஒரு லேண்ட்மார்க் ஜட்ஜ்மென்ட்டை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பின் பிரகாரம் இனி கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அவர்கள் சட்டசபையில் பாஸ் செய்து அனுப்பிய அந்த மசோதாவை ஒப்புதல் கொடுக்கவேண்டும். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு அமைச்சரவையில் முடிவெடுக்கும் அந்த அறிவுரையின் பிரகாரம் நடந்து கொள்ள வேண்டும். சட்டசபை மசோதாவை அனுப்பி வைக்கும் போது அதை ஆளுநர்கள் காலம் தாழ்த்தக் கூடாது. உடனடியாக இந்த மசோதாக்களை ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள்.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற பதவியில் உட்கார்ந்து கொண்டு, அந்த பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் உள்பட எல்லா நடவடிக்கைகளும் அவர் தடுத்துக் கொண்டு வந்தார். ஆகவே, அந்த வேந்தர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரை வெளியேற்றி, அதற்கு பதிலாக மாநில அரசு அவர்கள் பரிந்துரை செய்கின்றவர்கள் வேந்தராக இருக்கவேண்டும் என்ற மசோதாக்களை ஏற்றி அனுப்பி காலந்தாழ்த்தி வந்தார். அதோடு மட்டுமில்லாமல் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அப்பாயின்மென்ட்ஸ் உள்பட எந்த ஒரு பைல் அனுப்பினாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்தி வந்ததால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றமே இந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து, அந்த 10 மசோதாக்களும் இன்று முதல் நடைமுறைக்கு வரும்படியாக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இனிவரும் காலங்களில் ஆளுநர்கள் எந்த ஒரு மசோதாக்களையும், முதலமைச்சர் உள்பட அமைச்சரவை கூட்டம் நிதி உதவி மற்றும் ஆலோசனை பிரகாரம் தான் நடந்து கொள்ள வேண்டும். அதை மீறி நடந்து கொள்ளக் கூடாது என்றும் இந்த உத்தரவில் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு மசோதா ஆளுநருக்கு வந்துவிட்டால் அதனை 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவெடுக்கும் பட்சத்தில், 3 மாதத்திற்குள் அனுப்பி வைக்கலாம். இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் தமிழ்நாட்டின் நலன் கருதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது ஒரு வரவேற்கத்தக்க விஷயம் ஆகும். தமிழ்நாடு முதலமைச்சர் இந்த வழக்கின் மூலம் இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களின் சுயாட்சியை நிலைநாட்டி இருக்கிறார். கவர்னர்கள் இடையூறாக இருந்தால், நீதிமன்றத்தை அணுகலாம். இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அத்தனை மாநிலங்களுக்கும் பொருந்தும். இனிவரும் காலங்களில், கவர்னர் மசோதாக்களை காலம் தாழ்த்தி வைக்க முடியாது.
ஒரு கவர்னர் நண்பரா, அட்வைசராக இருக்கவேண்டும், நீங்கள் மறியல் போடுவது போல நடந்து கொள்ளக் கூடாது என்று நிறைய அட்வைஸ் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கிறது. இந்த தீர்ப்பு தமிழக கவர்னருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அத்தனை கவர்னருக்கும் பொருந்தும். இந்த 10 மசோதாக்களில் ஆளுநர் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருப்பதை நீக்கம் செய்வதற்காக தான் இந்த வழக்கு இயற்றப்பட்டது. எனவே இன்றிலிருந்து அவர் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த பில்லில் யாரை குறிப்பிட்டு இருக்கிறார்களோ தமிழ்நாடு அரசு யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் வேந்தராக இருக்க முடியும்.
இந்த வழக்கில் நீட் சம்பந்தமாக சொல்லவில்லை என்றாலும், இவர்கள் பதிவு செய்திருக்கும் அந்த விதி பிரகாரம் பார்த்தால், நீட் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது கூட நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்று தீர்ப்பில் தெள்ளத்தெளிவாக சட்டத்தில் கூறப்பட்டதை நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது. தமிழக முதலமைச்சர் அறிவுரையின் பேரில், அதை நேற்றைக்கு (ஏப்ரல் 7) நாங்கள் தாக்கல் செய்து விட்டோம். அதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். வருகிற திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு வர வாய்ப்புகள் உள்ளது. என்றைக்கு வரும் என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் என்ன தேதி சொல்கிறார்களோ அதன் பிரகாரம் தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.
The post மசோதாக்களுக்கு இனி ஆளுநர் காலம் தாழ்த்த முடியாது: திமுக எம்.பி. வில்சன் பேட்டி appeared first on Dinakaran.