மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையைப் புண்படுத்தாது: கர்நாடக ஐகோர்ட்

3 months ago 16

பெங்களூரு: இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையைப் புண்படுத்தாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷங்களை எழுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி இரவில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மசூதிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாகவும், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷங்களை எழுப்பியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக காவல்துறையினர் பதிவு செய்த புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் தெரியாத நபர்கள் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் 2 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன்படி அத்துமீறி நுழைந்தது[ சட்டப்பிரிவு 447], பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்[ சட்டப்பிரிவு 505], மத நம்பிக்கையைப் புண்படுத்தியது [சட்டப்பிரிவு 295A] , மிரட்டல் விடுத்தது உள்ளிட்டவற்றின்கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து, கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மசூதியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிடுவது எந்த சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் என்பது புரியவில்லை என்று குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட பகுதியில் இந்துக்களும், முஸ்லீம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதாக புகார்தாரர் கூறியிருப்பதாக நிதிபதி சுட்டிக் காட்டினார். அப்படி இருக்கும்போது எல்லா செயல்களும் மத நம்பிக்கையைப் புண்படுத்தும் சட்டப்பிரிவு 295A இன் கீழ் வராது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கு மேலும் இந்த விவகாரத்தில் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

The post மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையைப் புண்படுத்தாது: கர்நாடக ஐகோர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article