மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் ₹1 லட்சம் அபகரிக்க முயற்சி 3 பேர் அதிரடி கைது யூடியூப் சேனலில் தவறான செய்தி வெளியிடுவதாக மிரட்டல்

1 month ago 5

திருவண்ணாமலை, அக்.17: திருவண்ணாமலை அருகே மசாஜ் சென்டர் உரிமையாளரை மிரட்டி ₹1 லட்சம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் அஜித்(27). இவர், திருவண்ணாமலை- அவலூர்பேட்டை சாலை பைபாஸ் ரிங் ரோடு பகுதியில், ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது மசாஜ் சென்டருக்கு வந்த, திருவண்ணாமலை பே கோபுரத் தெரு, வெங்கடேசன் மகன் மூர்த்தி(42), திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் உதயகுமார்(22), சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த நவாப்ஜான் மகன் பாபு (22) ஆகியோர், ₹1 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

மேலும், மூர்த்தி என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருவதாகவும், மசாஜ் சென்டர் குறித்து அதில் தவறான செய்தி வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். ஆனாலும், மசாஜ் சென்டர் உரிமையாளர் அஜித், இந்த சென்டரில் எந்த தவறும் நடைபெறவில்லை, எனவே பணம் தர முடியாது என மறுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் அஜித்தின் பைக்கை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளனர். இதுகுறித்து அஜித் உடனடியாக மங்களம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், எஸ்ஐ ராஜீவ்காந்தி தலைமையிலான தனிப்படையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், பணம் கேட்டு மிரட்டிய மூர்த்தி, உதயகுமார், பாபு ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

The post மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் ₹1 லட்சம் அபகரிக்க முயற்சி 3 பேர் அதிரடி கைது யூடியூப் சேனலில் தவறான செய்தி வெளியிடுவதாக மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article