மங்களூர்- சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இளம்பெண், குழந்தையை செல்போனில் ரகசியமாக போட்டோ எடுத்தவர் கைது: பயணிகள் தாக்க முயன்றதால் பரபரப்பு

1 week ago 5


மீனம்பாக்கம்: கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானத்தில் 86 பயணிகள் இருந்தனர். அப்போது, கர்நாடகவை சேர்ந்த கோபாலகிருஷ்ணா (45) என்பவர், தனது பக்கத்து இருக்கையில் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த 29 வயது இளம்பெண் ஒருவரை, செல்போனில் ரகசியமாக புகைப்படம் எடுத்தார். இதை பார்த்ததும் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், ‘எதற்காக என்னை புகைப்படம் எடுத்தீர்கள்? என கேட்டு வாக்குவாதம் செய்தார். மேலும் விமான பணிப்பெண்களிடமும் புகார் செய்தார். இதையடுத்து அவர்கள், கோபாலகிருஷ்ணாவிடம் விசாரித்தபோது, ‘நான் புகைப்படம் எடுக்கவில்லை என்றும் சிறிது நேரம் கழித்து கைக்குழந்தையைதான் புகைப்படம் எடுத்தேன்’ என்றும் மாறி மாறி பேசினார்.

இதனால் அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது, இளம்பெண் மற்றும் கைக்குழந்தையின் புகைப்படங்கள் பல கோணங்களில் இருந்தது தெரியவந்தது. இதனால் சக பயணிகள் ஆத்திரத்துடன் கோபாலகிருஷ்ணாவை தாக்க முற்பட்டனர். அவர்களை விமான பணிப்பெண்கள் சமாதானப்படுத்தியதோடு, ‘நாங்கள் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றனர். மேலும் விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் செல்போனை பறித்து கொண்டு, அதில் இருந்த அனைத்து புகைப்படங்களையும் அழித்தார். இந்நிலையில் நள்ளிரவு 12.10 மணிக்கு விமானம், சென்னையில் தரை இறங்கியது. கோபாலகிருஷ்ணாவை, இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் காவல் நிலையத்துக்கு சென்று, வாய் மொழியாக புகார் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை நடத்தியபோது, ‘குழந்தை அழகாக சிரித்ததால், அந்த ஆனந்தத்தில் புகைப்படம் எடுத்தேன். என்னை மன்னித்து அனுப்பி விடுங்கள். நான் காலை 6.30 மணி விமானத்தில் சிங்கப்பூர் செல்ல வேண்டும்’ என்று கோபாலகிருஷ்ணா கூறினார். ஆனால் அதை போலீசார் ஏற்கவில்லை. அவரது சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், நடந்த சம்பவத்தை புகாராக எழுதி கொடுக்கும்படி கூறி அந்த பெண்ணை போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மங்களூர்- சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இளம்பெண், குழந்தையை செல்போனில் ரகசியமாக போட்டோ எடுத்தவர் கைது: பயணிகள் தாக்க முயன்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article