‘டிஜியாத்ரா’ செயலி முறையால் விமான பயணிகள் திணறுவதை தடுக்க 100 ஒப்பந்த ஊழியர்கள் பணி நியமனம்

3 hours ago 2

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையங்களில் பயணிகள் முக அடையாளங்களை தானியங்கி கருவிகளில் காட்டி, டிஜியாத்ரா முறையில் உள்ளே சென்று விமானங்களில் ஏறும் முறையால் கருவிகளை சரியாக செயல்படுத்த தெரியாமல் பயணிகள் திணறுகின்றனர். எனவே, இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை விமான நிலையத்தில், டிஜியாத்ரா முறையை பயன்படுத்தும் பயணிகள் உதவிக்காக, தனியார் ஒப்பந்த ஊழியர்கள் 100 பேரை பணிக்கு அமர்த்தி உள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள முக்கிய உள்நாட்டு விமான நிலையங்களில் புறப்பாடு பயணிகளுக்கு காகித ஆவணங்கள் இல்லாமல் முக அடையாளங்களை கருவிகளில் காட்டி பயணிக்கும் டிஜியாத்ரா என்ற புதிய திட்டத்தை இந்திய விமான நிலைய ஆணையம் கடந்த 2024ம் ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, வாரணாசி, புனே, விஜயவாடா உள்ளிட்ட விமான நிலையங்களில் முதலில் தொடங்கப்பட்டது. அதன் பின்பு கடந்த 2024 ஜூன் மாதத்தில் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையங்களான டெர்மினல்கள் 1, 4 ல் டிஜியாத்ரா திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது.

இந்த திட்டத்தில் பயணிகள் நுழைவாயில் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் இடங்களில் புகைப்பட அடையாள அட்டை, போர்டிங் பாஸ் உள்ளிட்ட ஆவணங்களை தனித்தனியே எடுத்து வந்து, நுழைவாயிலில் பாதுகாப்பு சோதனைக்காக நிற்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களிடம் காட்டிவிட்டு, அவர்கள் அனுமதி பெற்றுதான் உள்ளே செல்ல வேண்டும் என்பது இல்லை.
உள்நாட்டு புறப்பாடு பயணிகள், டிஜியாத்ரா செயலியில் தங்களுடைய புகைப்படம், புகைப்பட அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை ஏற்கனவே பதிவு செய்து இருக்க வேண்டும்.

விமான நிலையத்திற்குள் உள்ளே நுழையும் இடத்திலும், பாதுகாப்பு சோதனை நடக்கும் இடம், விமானத்தில் ஏறும் இடம் ஆகிய இடங்களில் டிஜியாத்ரா சிறப்பு வழியில் அமைக்கப்பட்டுள்ள கருவிகளில், டிஜியாத்ரா செயலியை வைத்ததும், அங்குள்ள டிஜியாத்ரா கேமராவில் அங்கு அமைக்கப்பட்டுள்ள திரையில் பயணியின் முகம் தெரிவதோடு ஆவணங்கள் சரியாக இருந்தால் P என்ற குறியீடு வருவதோடு, பயணி உள்ளே செல்வதற்காக தானியங்கி கேட் திறக்கப்பட்டு, பயணி உள்ளே சென்றுவிடலாம். இதை அங்குள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணித்துக் கொண்டு இருப்பார்களே தவிர, அவர்கள் நேரடியாக பயணியிடம் வந்து சோதனைகளை நடத்த மாட்டார்கள்.

இந்த திட்டம் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையங்களில் செயல்பாட்டிற்கு வந்து சுமார் 10 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் பயணிகள் பலர், இந்த திட்டத்தை சரியாக செயல்படுத்த தெரியாமல் திணறி வருகின்றனர். இதையடுத்து அருகே நிற்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களிடம் பயணிகள் உதவிகள் கேட்டால், அவர்களிலும் சிலருக்கு இந்த சிஸ்டம் எவ்வாறு செயல்படுத்துவது என்று தெரியாமல் திணறுகின்றனர்.

அதோடு பயணிகளை ஏற்கனவே மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை நடத்தி அனுப்பி வைக்கும், பழைய பாதைக்கு வரவழைத்து, பயணிகளை சோதனை நடத்தி அனுப்புகின்றனர். இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள் ஆவதோடு, பாதுகாப்பு சோதனைகளை முடித்து, பயணிகள் உள்ளே செல்வதற்கு காலதாமதமும் ஏற்படுகிறது.

இதன் காரணமாக, பயணிகள் பலர், சென்னை விமான நிலையத்தில், டிஜியாத்ரா கருவிகள் சரிவர செயல்படவில்லை என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து குறைகளாக பதிவிட்டு வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா சிஸ்டம் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா வழியில் செல்லும் பயணிகளுக்கு உதவுவதற்காக, டிஜியாத்ரா சிஸ்டத்தில் நன்கு பயிற்சி பெற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் 100 பேரை ஒப்பந்த அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் பணிக்கு நியமித்துள்ளனர். அவர்கள் ஷிப்ட் முறையில், 24 மணி நேரமும் சுழற்சியாக பணியாற்றி, டிஜியாத்ரா சிறப்பு வழியில் விமான நிலையத்திற்கு செல்லும் உள்நாட்டு பயணிகளுக்கு பெரிதும் உதவி செய்கின்றனர்.

இந்த திட்டம் சென்னை விமான நிலையத்தில் தற்போது புதிதாக செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் டிஜியாத்ரா சிறப்பு வழிகளில் உள்ளே செல்லும் பயணிகள் சிரமமின்றி சென்று, விமானங்களில் பயணிக்கின்றனர். இதற்கு பயணிகளிடம் தனியாக கட்டணம் எதுவும் வசூலிப்பது கிடையாது. இது சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் காகிதங்களிலான ஆவணங்கள் இல்லாமல் பயணிகள் தங்கள் முக அடையாளங்களை தானியங்கி இயந்திரத்தில் காட்டி, டிஜியாத்ரா என்ற திட்டத்தின் மூலம், விமான நிலையத்திற்குள் சென்று, விமனங்களில் பயணிப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post ‘டிஜியாத்ரா’ செயலி முறையால் விமான பயணிகள் திணறுவதை தடுக்க 100 ஒப்பந்த ஊழியர்கள் பணி நியமனம் appeared first on Dinakaran.

Read Entire Article