சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாட்டில் நெல்லுக்கு அடுத்தபடியாக பெரும்பான்மையாகப் பயிரிடப்படும் மக்காச்சோளம் மீது 1 சதவீதம் கூடுதல் வரி (செஸ் வரி) விதித்துக் கடந்த 16.12.24 அன்று தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் சிறு, குறு விவசாயிகள் தங்களிடம் இருக்கும் சிறிதளவு விளைநிலத்தில் பெரும்பாலும் பருவ மழையை மட்டுமே நம்பி மானாவாரியாகப் பயிரிட்டு விளைவிக்கக்கூடிய பயிர் மக்காச்சோளமாகும். தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும். மக்காச்சோளத்தில் 60 விழுக்காடு மதிப்பூட்டப்பட்ட உணவு வகைகளுக்கும், கால்நடைகள் மற்றும் கோழி தீவனங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், கரும்பு சக்கைக்கு மாற்றாக எத்தனால் உற்பத்திக்கும் மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 50 லட்சம் டன் மக்காச்சோளம் தேவை என்ற சூழலில், தற்போது 30 லட்சம் டன் மக்காச்சோளம் மட்டுமே உற்பத்தி ஆகிறது. மீதமுள்ள 20 லட்சம் டன் மக்காச்சோளம் ஆந்திரா, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து பெறப்படுகிறது.
இந்நிலையில், மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான உதவிகளைச் செய்து ஊக்கமளித்திருக்க வேண்டிய தி.மு.க அரசு, அதனைச் செய்யத்தவறியதோடு, அதற்கு நேர் எதிராக சிறிதும் மனச்சான்று இன்றிக் கூடுதல் வரிவிதித்திருப்பது கொடுங்கோன்மையாகும்.
ஏற்கனவே விதை, இடுபொருட்கள், உரம், பூச்சிகொல்லி, களைக்கொல்லி மருந்துகள் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, புழு தாக்கம், பருவகால மாற்றம் என பல்வேறு தடைகள் சூழ்ந்து, வேளாண்மை செய்வதே விவசாயிகளுக்கு தற்காலத்தில் பெரும்பாடாகியுள்ளது. அத்தனை துன்பங்களையும் தாண்டி வேளாண்மை செய்து பயிர் விளைவித்தாலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் பெரும்பான்மையான விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி வருகின்றனர்.
அதோடு, மத்திய - மாநில அரசுகள் தங்கள் பங்கிற்கு, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்தும் வேளாண்மையை நசித்து வருகிறது.
விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென நெடுங்காலமாக வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை வைத்து, போராடி வரும் நிலையில், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத திராவிட மாடல் தி.மு.க அரசு, தற்போது மக்காச்சோளத்திற்குக் கூடுதலாக ஒரு விழுக்காடு வரி விதித்திருப்பது வேளாண்மையை முற்றாக அழிப்பதற்கே வழிவகுக்கும்.
ஆகவே, தி.மு.க அரசு மக்காச்சோளத்தின் மீது கூடுதலாக 1 விழுக்காடு வரிவிதித்து வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.