மக்கள், மாநிலங்களிடையே பாகுபாடு; இந்திய ஒருமைபாட்டை சீர்குலைக்கும் நிதி பட்ஜெட்: தொல்.திருமாவளவன் கண்டனம்

1 week ago 3

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி அறிக்கை: நாடாளுமன்றத்தில் நேற்று ஒன்றிய அரசு தாக்கல் நிதிநிலை பட்ஜெட் அறிக்கை, தங்களின் கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இதன்மூலம் பிற மாநிலங்கள், அம்மாநில மக்கள் வஞ்சிக்கப்படுவதால், இந்திய ஒருமைப்பாடே சீர்குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் ஓரவஞ்சனை போக்கை விசிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

பாஜ கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் என்ஐஎப்டி தொழில்நுட்ப மையம், மக்கானா பயிரை மேம்படுத்தும் வாரியம், புதிதாக கிரீன்பீல்டு விமானநிலையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிதிநிலை பட்ஜெட்டில் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நடப்பாண்டில் கூடுதலாக 10 ஆயிரம் மருத்துவ படிப்பு இடங்கள் உருவாக்கப்படும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. எனினும், மருத்துவதுறை ஒதுக்கீட்டில் அதற்கான கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

அணுசக்தி மின்சாரத்தை அதிகரித்து, அதன் தேவையை நிறைவேற்றுவோம் என்றனர். ஆனால், அந்தத் துறைக்கு கடந்தாண்டைவிட தற்போது ரூ.920 கோடி குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியே இந்தாண்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 3 கோடி புதிய வீடுகள் கட்டப்படும் என்று குடியரசு தலைவர் உரையிலும் பட்ஜெட்டிலும் அறிவித்துள்ளனர். எனினும், அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்தாண்டு விவசாயத்துறைக்கு ரூ.3900 கோடியை குறைத்துள்ளனர். சிறு,குறு, நடுத்தர தொழில் துறைக்கு கடந்தாண்டைவிட 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உயர்த்தப்பட்டு உள்ளது.
தேசிய ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் திட்டத்துக்கு வெறும் ரூ.130 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. எஸ்சி, எஸ்டி மக்கள்தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகையில் பாதியைக்கூட ஒன்றிய பாஜ அரசு ஒதுக்கவில்லை. கடந்தாண்டு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கு ரூ.1145 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதில் ரூ.344 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. இந்தாண்டு வெறும் ரூ.413.9 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளனர்.

இதன்மூலம் சிறுபான்மை சமூகத்தினரின் கல்வியை அழித்தொழிக்கும் வகையில் ஒன்றிய பாஜ அரசு செயல்படுவது வெட்டவெளிச்சமாகி உள்ளது. இந்த பட்ஜெட்டில் சமூக அடிப்படையில் எஸ்சி, எஸ்டி மற்றும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களை வஞ்சித்துள்ளனர். மாநிலங்களை எடுத்துக் கொண்டால், தமிழகத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து உள்ளனர். இவை சமூக ரீதியில் ஏற்றத்தாழ்வை வலுப்படுத்துவதாகவும், மாநில உரிமைகளை மறுப்பதாகவும் இருக்கிறது. இது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாக உள்ளது. மொத்தத்தில், மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் வெற்று அறிவிப்புகளைச் செய்திருக்கும் ஒன்றிய பாஜ அரசின் பட்ஜெட், மாநிலங்கள் மற்றும் மக்களிடையே பாகுபாடுகளை உருவாக்கும் பிரிவினைவாதப் போக்கைக் கொண்டதாக உள்ளது. இவற்றை விசிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

The post மக்கள், மாநிலங்களிடையே பாகுபாடு; இந்திய ஒருமைபாட்டை சீர்குலைக்கும் நிதி பட்ஜெட்: தொல்.திருமாவளவன் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article