மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது வட மாநிலங்களுக்கு சாதகமாகி விட்டது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு பேச்சு

3 days ago 2

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்ற அகில இந்திய ஆராய்ச்சி மாணவர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: இந்தியாவில் என்.ஐ.ஆர்.எப் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது, உலக தரவரிசையில் 288வது வரிசையில் உள்ளது. விரைவில் 200க்குள் வரும் என்று நம்புகிறேன்.

நாம் அனைவரும் கடினமாக உழைத்தால், 100ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்குள் உலகின் முதல் பொருளாதார சக்தியாக மாறுவோம். 65% இந்தியர்கள் ஜெனரேட்டிவ் ஏஐ பயன்படுத்துகிறார்கள். இது நமது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு உதாரணம், 80 வயதில்கூட இந்தியர்கள் இடைவிடாமல் உழைக்கிறார்கள். இது நமக்கான ஒரு பெரும் சாதனையாகும். தமிழ்நாட்டில் தற்போது பிறப்பு விகிதம் என்பது 1.4, ஆந்திராவில் 1.5. ஆனால் உத்திரபிரதேசம், பீகார் மாநிலங்களில் அதிகமாகும்.

தென்னிந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாடு முக்கிய பொருட்டாக பார்க்கப்பட்டது. இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 140 கோடி, ஆனால் நாம் என்னதான் கட்டுபடுத்தினாலும் 175 கோடியை தாண்டி செல்லக்கூடும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள், 25 ஆண்டுகளுக்கு முன்பே குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தின. தற்போதைய இந்த மாநிலங்களில் பிறப்பு சதவிகிதம் குறைந்துவிட்டன.

ஆனால் பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. குழந்தை பிறப்பு சதவீதமும் அங்கே அதிகமாக இருக்கின்றன. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதும் நமக்கு ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அந்த மாநிலங்களுக்கு அது ஒரு சாதகமாக உள்ளது. இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் தொகை மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் வெளிநாட்டுக்கு செல்வது போல் வட மாநிலத்தோர் இங்கு குடியேற நேரிடும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது வட மாநிலங்களுக்கு சாதகமாகி விட்டது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article