புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் சுற்றுலா தலங்கள் இருந்தாலும் தனி சிறப்பை பெற்றது சித்தன்னவாசல் சுற்றுலா தலம். இங்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பழங்காலத்தில் சித்தர்கள் மலைகளிலும் குகைகளிலும் துறவு வாழ்க்கை வாழ்ந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். துறவிகள் மலைகளில் பூஜைகள் மற்றும் தியானங்களை மேற்கொள்வார்கள். குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களைக் கொண்டு வரையப்பட்டவை.
நாட்டின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1,000 முதல் 1,200 ஆண்டுகள் பழமையானவை. இந்த குகைகளும், குகை ஓவியங்களும் கி.பி. 1990களில் நிறம் மங்க தொடங்கியதால் செயற்கையாக வர்ணம் போன்ற பொருட்களை கொண்டு புதுப்பிக்கப்பட்டது. இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுகையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவரைகளும் காணப்படுகின்றன. இதன் அருகில் உள்ள ஏலடிப்பட்டத்தில் சமணர்களின் படுகைகளும், தமிழ் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. அங்கு சமண கோயில் ஒன்றும் உள்ளது.
சித்தன்னவாசலில் உள்ள சமணர்படுகைகள் மற்றும் சமணர் கோயில்கள் ஆகியவை சேர்ந்து ‘ஏழடி பட்டம்’ என அழைக்கப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டினை சேர்ந்த சமணர் கோயில் ஒன்று இருபுறமும் மகாவீரர் சிலைகளுடன் இங்கு காணப்படுகிறது. இங்குள்ள குகைகளின் மேற்கு சரிவிலும், மூலிகைகளினால் வரையப்பட்ட ஓவியங்கள் காணப்படுகிறது. தமிழர்களின் கலை, பண்பாட்டினை பறை சாற்றும் உயிரோட்டமுள்ள ஓவியங்களாக இவை திகழ்கின்றன். அழகிய குளத்தில் தாமரை மலர்கள், அல்லி மலர்கள், மீன்கள் நீந்துவது போலவும், எருமைகள் நிற்பது போலவும், யானைகள் தண்ணீர் குடிப்பது போலவும், கீரிப்பிள்ளை விளையாடுவது போலவும், அரசன்-அரசியின் ஓவியங்களும் தத்ரூபமாக அமையப் பெற்றுள்ளது.
தொல்லியல் துறை மூலமாக சித்தன்னவாசல் பகுதிகளில் மேற்கொண்ட அகழ்வராய்ச்சிகளின் படி இந்த பகுதிகளில் புதைக்கப்பட்ட பானைகளும் அவற்றில் மனித எலும்புக்கூடுகளும் காணப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கிற்காக இங்கு சிறுவர் பூங்காவும் இசை நீருற்றுகளும் சுற்றுலாத்துறை சார்பாக நிறுவப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு வந்து தங்கி செல்வதற்கு ஏதுவாக பயணியர் மாளிகை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள குகை ஓவியங்கள் மற்றும் சமணர்படுகைகள் ஆகியவற்றை காண வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இந்த சுற்றுலா தலத்தை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலா ஆர்வலர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சட்டசபையில் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை மேம்படுத்த ரூ.3.90 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் முடிந்த பிறகு விரைவில் பணிகள் தொடங்கப்படும். தரமான சாலைகள், தெரு விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் படகு குழாம், சிறுவர்கள் விளையாடுவதற்கு பிரத்யேகமாக சாதனங்கள் அமைப்பது. வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. லேக் மேம்பாடு, கலை மேம்பாடு, கலாசார மேம்பாடு உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது’’ என்றார்.
* ‘புகைப்படத்துடன் மியூசியம் வேண்டும்’
சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலம் சித்தன்னவாசல். புதுக்கோட்டையிலிருந்து இலுப்பூர் செல்லும் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனை மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிதியை கொண்டு உலக தரத்தில் இதனை மேம்படுத்த வேண்டும். குடிநீர், தங்கும் இடம், உணவு சாப்பிடும் இடம் என தனித்தனியாக இடங்களை மேம்படுத்த வேண்டும். வெளிநாட்டினர், வெளி மாநிலத்தவர் இங்கு வரும்போது அவர்கள் தெளிவாக சித்தன்னவாசலை பற்றி தெரிந்து கொள்ள அங்கேயே ஒரு புகைப்படத்துடன் கூடிய மியூசியம் உருவாக்க ேவண்டும்.’’ என்றனர்.
The post மக்களை சுண்டி இழுக்கும் வகையில் ரூ.3.90 கோடியில் நவீனமயமாகும் ‘சித்தன்னவாசல்’ சுற்றுலாத்தலம்: விரைவில் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.