சென்னை: சென்னையில் இருந்து சண்டிகர், காசியாபாத் அருகே உள்ள ஹிண்டன் நகர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 4 விமானங்கள் நேற்றும் ரத்தானது. எல்லைப் பகுதியில் இன்னும் சகஜ நிலை திரும்பாததாலும், இந்த விமானங்களில் பயணிக்க போதிய பயணிகள் இல்லாததாலும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டு, கடந்த 7ம் தேதி அதிகாலையில் போர் தொடங்கியதில் இருந்து, சென்னையில் இருந்து அரியானா மாநிலம் சண்டிகர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காசியாபாத் அருகில் உள்ள ஹிண்டன் நகருக்கு செல்லும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆகிய, இரண்டு புறப்பாடு விமானங்கள், சண்டிகரிலிருந்து சென்னைக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், ஹிண்டன் நகரில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஆகிய நான்கு விமானங்கள் நேற்றுமுன்தினம் வரை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் போர் நிறுத்த அறிவிப்பு வந்ததன் காரணமாக இந்தியாவில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்கள், உடனடியாக மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் இயக்கப்படும் சண்டிகர், ஹிண்டன் நகர் ஆகிய 4விமானங்கள் நேற்று செவ்வாய்க்கிழமையிலிருந்து மீண்டும் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை விமான நிலைய அதிகாரிகள் நேற்றும் அந்த நான்கு விமானங்களும் ரத்து என்று அறிவித்துள்ளனர். அங்கு சகஜ நிலை ஏற்பட்டு பயணிகள் போக்குவரத்து மீண்டும் தொடங்காத காரணத்தாலும், நேற்று இந்த விமானங்களில் பயணிக்க போதிய பயணிகள் இல்லாததாலும், நேற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
The post போர் நிறுத்தம் அறிவித்த பின்னும் எல்லைப்பகுதிக்கு செல்லும் 4 விமானம் தொடர்ந்து ரத்து appeared first on Dinakaran.