சென்னை: “4 பேர் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.1,500 மதிப்பில் மத்திய அரசு அரிசி, பருப்பு வழங்குகிறது" என்று கூறிய தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஹெச்.ராஜா, தமிழக மக்களை திராவிட கட்சிகள் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா முன்னிலையில் எம்ஜிஆர் மக்கள் மன்ற நிர்வாகிகள் வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் இன்று பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு ஹெச்.ராஜா பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஏழை மக்களுக்கான திட்டங்களை தரும் ஒரே தலைவர் பிரதமர் மோடி தான். கரோனா காலக்கட்டத்தில் இருந்து ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ அரசி, 1 கிலோ பருப்பு என மத்திய அரசு நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு இலவசமாக வழங்குகிறது. ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால், 20 கிலோ அரிசி, 4 கிலோ பருப்பு கிடைக்கும். இதன் மதிப்பு இன்றைய தினம் ரூ.1,500 ஆகும். அந்த வகையில், 4 பேர் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.1,500 மதிப்பில் மத்திய அரசு அரிசி, பருப்பு வழங்குகிறது.