மக்களின் உணர்வை புரிந்துகொள்ளாமல் செயல்படுகிறார் தமிழக ஆளுநரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது: திருச்சி சிவா எம்பி பேச்சு

3 weeks ago 6

பெரம்பூர்: திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம், ஓட்டேரி பாஷ்யம் தெருவில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. திரு.வி.க.நகர் எம்எல்ஏ தாயகம் கவி தலைமை வகித்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். திருச்சி சிவா எம்பி, புதுக்கோட்டை விஜயா, தமிழன் பிரசன்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர். கலாநிதி வீராசாமி எம்பி, பகுதிச் செயலாளர்கள் தமிழ்வேந்தன், சாமிக்கண்ணு.

மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், கிருஷ்ணகுமார்‌, தமீம், வழக்கறிஞர் மறைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் திருச்சி சிவா எம்பி பேசியதாவது: கடந்த ஆட்சியில் பருவ மழையின்போது சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தது. ஆனால் தற்போது பெய்த மழையில் மக்கள் எந்தவித பாதிப்பும் அடையாமல் இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக செய்தனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் எழுதி கொடுக்கப்படுகிற உரையை மட்டும்தான் ஆளுநர் படிக்க வேண்டும். மாறாக அதனை திருத்தம் செய்ய எந்த ஒரு அதிகாரமும் அவருக்கு கிடையாது. அதனால் தான் பேரவையில் ஆளுநர் தனது விருப்ப உரையை வாசித்தபோது நமது முதல்வர் அவரது உரையை நீக்கியதாக அறிவிப்பை வெளியிட்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார்.

கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டிய ஆளுநர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திராவிடம் என்ற வார்த்தையை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்து பாடி இருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்று. குடியரசு தலைவர், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் இந்த மூன்றில் எது பெரியது என்றால், இந்த மூன்றும் இல்லை அரசியல் சாசன சட்டம் மட்டுமே பெரியது.

பழைய நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள மைய மண்டபத்தில்தான் அரசியல் சாசன சட்ட திருத்தம் தொடர்பாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக சட்ட மேதை அம்பேத்கர் தலைமையில் விவாதம் நடைபெற்றது. இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக இந்தி ஒற்றை வாக்கில் மாற்றப்பட்டது.  தமிழ்நாட்டில் திமுக போன்ற கட்சியும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரும் இல்லையெனில் இந்தி நிரந்தர ஆட்சி மொழியாக இன்று இருந்திருக்கும். திமுக இல்லையெனில் இந்தியாவின் துணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் கூட இன்று இருந்திருக்காது.

ஒன்றிய அரசு நிறைவேற்றும் அனைத்து திட்டங்களும் இந்தி, சமஸ்கிருத பெயர்களை வைத்து மட்டுமே நிறைவேற்றி வருகிறார்கள். பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் நட்பு பாராட்ட முடியாது, ஏனெனில் அவர்களுக்கு இந்தியை தவிர வேறு மொழிகள் தெரியாது. மொழியையும், கலாச்சாரத்தையும் காக்கக்கூடிய ஒரு போர்க்களமாக தமிழ்நாடு இருந்தால், தமிழ்நாட்டை காக்கக்கூடிய கேடயம்போல் திமுக என்றும் இருக்கும். இவ்வாறு பேசினார்.

The post மக்களின் உணர்வை புரிந்துகொள்ளாமல் செயல்படுகிறார் தமிழக ஆளுநரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது: திருச்சி சிவா எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article