மக்களவையில் விவாதம் தொடக்கம் அரசியலமைப்பு கொள்கைகளை காங்கிரஸ் அழிக்க முயற்சிக்கிறது: ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு

4 weeks ago 5

புதுடெல்லி: அரசியலமைப்பு கொள்கைகளை காங்கிரஸ் எப்போதும் அழிக்க முயற்சிப்பதாக மக்களவையில் ராஜ்நாத்சிங் குற்றம் சாட்டினார். இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் புகழ்பெற்ற பயணம் பற்றிய விவாதம் என்ற தலைப்பில் மக்களவையில் இரண்டு நாள் விவாதம் நேற்று தொடங்கியது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விவாதத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது என்ற பேச்சு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை.

இன்றைய நாட்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் அரசியல் சட்டத்தை தங்கள் சட்டைப் பையில் வைத்திருப்பதை நான் காண்கிறேன். உண்மையில் இதைத்தான் அவர்கள் சிறுவயதில் இருந்து கற்றுக்கொண்டார்கள். தலைமுறை தலைமுறையாக அரசியலமைப்பை அவர்கள், தங்கள் பாக்கெட்டுகளில் வைத்திருக்கின்றார்கள். ஆனால் பா.ஜ அரசியலமைப்பின் முன் எப்போதும் தலைவணங்குகிறது. அரசியலமைப்பு நிறுவனங்களின் சுதந்திரம், சுயாட்சியுடன் ஒருபோதும் விளையாடவில்லை.

ஆனால் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தீங்கிழைக்கும் மனப்பான்மையுடன் அடிக்கடி அரசியலமைப்பை திருத்தியது. அரசியலமைப்பு கொள்கைகளை அழிக்க முயற்சித்தது. எமர்ஜென்சி திணிப்பு, பல மாநில அரசுகளை பதவி நீக்கம் செய்தல், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மாற்றியமைத்தல் போன்ற அரசியலமைப்பு கோட்பாடுகளை மீறி, அரசியல் சட்டத்தை சிதைத்தவர்கள் இப்போது அதன் பாதுகாப்பிற்காக பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் பேசுகையில்,’ சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக தரம் குறைக்கப்படுகிறார்கள். இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கி செல்கிறது. ஹிட்லர் கூட கொடுங்கோன்மையை நிலைநாட்ட அரசியலமைப்பைத் திருத்தினார். பாஜ அரசும் அதே பாதையில் நடப்பது போல் தெரிகிறது’ என்றார்.

* நான் விவசாயி மகன் நான் விவசாய தொழிலாளி மகன் தன்கர்-கார்கே நேருக்கு நேர் மோதல்
மாநிலங்களவையில் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கும், எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. தன்கர் கூறுகையில்,’ எனக்கு எதிராக தினம் தினம் ஒரு பிரசாரம் நடக்கிறது. இது நான் சேர்ந்த சமூகத்திற்கு எதிரான பிரசாரம். நான் விவசாயி மகன். அசர மாட்டேன்’ என்றார்.

இதனால் கோபம் அடைந்த கார்கே,’ நீங்கள் விவசாயி மகன் என்றால் நான் விவசாய தொழிலாளியின் மகன். நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது நான் உங்களை எப்படி மதிக்க முடியும். காங்கிரசை விமர்சனம் செய்ய பா.ஜ உறுப்பினர்களுக்கு நேரம் கொடுக்கப்படுகிறது. பதில் அளிக்க எங்களுக்கு எந்தவாய்ப்பும் இல்லை.’ என்று கார்கே பேசிக்கொண்டு இருக்கும் போதே அவையை திங்கட்கிழமை வரை தன்கர் ஒத்திவைத்தார்.

The post மக்களவையில் விவாதம் தொடக்கம் அரசியலமைப்பு கொள்கைகளை காங்கிரஸ் அழிக்க முயற்சிக்கிறது: ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article