தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம் : புகை மூட்டம், பனிமூட்டம் காரணமாக சென்னையில் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு!!

4 hours ago 3

சென்னை : தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் தினத்திற்கு முதல் நாளான இன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்றார்போல பழையவற்றை எரித்து போகிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள பயன்படாத பழைய பொருட்களை மக்கள் எரித்து வருவதால் சென்னையின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பனியுடன் புகையும் கலந்து மூட்டமாக உள்ளது. கடும் புகை மூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காற்று மாசை தடுக்க டயர், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை எரிக்க வேண்டாமென அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், போகிப் பண்டிகையால் ஏற்பட்ட புகை மூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு வர வேண்டிய, புறப்பட வேண்டிய 30 விமானங்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டன. டெல்லி, பெங்களூருவில் இருந்து சென்னை வர வேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் ஓடு பாதையே தெரியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்படுவதால் விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. துபாய், அபுதாபி, சிங்கப்பூர், கோலாலம்பூர், மும்பை, டெல்லி, பெங்களூரு, கோவா செல்ல வேண்டிய விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களின் நேர மாற்றம் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டன.

The post தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம் : புகை மூட்டம், பனிமூட்டம் காரணமாக சென்னையில் 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article