ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பேரவைக்கு நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் 69.65 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 பேரவை தொகுதிகளுக்கும் கடந்த செப்டம்பர் 18,25 மற்றும் இம்மாதம் 1ம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வௌியிட்டுள்ளது.
அதன்படி, “ இறுதிக்கட்ட தேர்தலில் 69.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 75 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் பேரவையில் வாக்களிக்கும் உரிமை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் பெறாத மேற்கு பாகிஸ்தான் அகதிகள், வால்மீகிகள் மற்றும் கூர்க்காக்கள் இந்த தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் வரலாற்று தருணத்தை பதிவு செய்தனர். அதிகபட்சமாக நான்கு பேரவை தொகுதிகளை கொண்ட உதம்பூர் மாவட்டம் மற்றும் மூன்று பேரவை தொகுதிகளை உடைய சம்பா மாவட்டம் ஆகிவற்றில் 76.9 சதவீத வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக 7 பேரவை தொகுதிகளை உடைய பாரமுல்லா மாவட்டத்தில் 61.03 சதவீத வாக்குகளும் பதிவாகின. ஒட்டுமொத்தமாக 3 கட்ட தேர்தல் முடிவில் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது அண்மையில் முடிந்த மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் பதிவான வாக்குகளை விட அதிகம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மக்களவை தேர்தலை விட அதிகம் ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தலில் 69.65% வாக்குகள் பதிவு: தலைமை தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.