பாஸ்டன்: மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி திடீர் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவர் ஆசிரியர்கள், மாணவர்களுடன் உரையாற்ற உள்ளார். மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, அமெரிக்காவில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்றிரவு பாஸ்டன் லோகன் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்களின் தலைவர் சாம் பிட்ரோடாவால் உள்ளிட்ட பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதுகுறித்து சாம் பிட்ரோடா வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்கா வந்துள்ள ராகுல்காந்தியை அன்புடன் வரவேற்கிறோம்; அவர் இளைஞர்களின் குரலாகவும், ஜனநாயகத்திற்கான குரலாகவும், சிறந்த எதிர்காலத்திற்கான குரலாகவும் விளங்குகிறார். அவரது கருத்தை ஒன்றிணைந்து கேட்போம்; கற்போம், கட்டமைப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ராகுல்காந்தி, ரோட் ஐலேண்டில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்திற்கு செல்லவிருக்கிறார். அங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடுகிறார். மேலும், வெளிநாடு வாழ் இந்தியர் சமூகத்தினர், இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உரையாட உள்ளார்.
ராகுல்காந்தியின் அமெரிக்க பயணம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா வெளியிட்ட பதிவில், ‘ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயண திட்டத்தின்படி இன்றும், நாளையும் (ஏப். 21, 22) அமெரிக்காவின் ரோட் ஐலேண்டில் உள்ள பிரவுன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடவுள்ளார். அதன்பின் நடக்கும் நிகழ்வில், வெளிநாடு வாழ் இந்தியர் சமூகத்தினர், இந்திய வெளிநாட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உரையாட உள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்தாண்டு செப்டம்பரில் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா ெசன்றிருந்தார். கிட்டத்தட்ட 8 மாத இடைவெளியில் தற்போது ராகுல்காந்தி அமெரிக்கா சென்றுள்ளார்.
செப்டம்பரில் சென்ற பயணத்தின்போது, டல்லாஸில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடினார். மேலும் இந்திய வெளிநாட்டு சமூகத்தினரை சந்தித்து உரையாற்றினார். பின்னர் டல்லாஸிலிருந்து வாஷிங்டனுக்கு சென்றார்; அங்கு ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடினார். ராகுல் காந்தியின் முந்தைய பயணத்தின் போது, நாட்டின் 90 சதவீத மக்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பழங்குடியினராக உள்ளனர் என்றும், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று கூறினார். அதனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய அரசின் முக்கிய நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், ஊடகங்களை உயர் ஜாதி வகுப்பினர் கைப்பற்றியதாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்தி அமெரிக்கா பயணம்: ஆசிரியர்கள், மாணவர்களுடன் உரை appeared first on Dinakaran.