விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி புரட்டாசி மாத பிரதோஷம், மகாளய அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி கோவிலுக்கு செல்ல கடந்த 30-ம் தேதி முதல் நாளை வரை என 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலையிலேயே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சதுரகிரியில் குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை அனுமதி வழங்கியவுடன் பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு சென்றனர்.
மகாளய அமாவாசையையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. அபிஷேகம் முடிந்ததும் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
முன்னதாக பக்தர்களின் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்கிறார்களா என உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்தனர். மேலும் மழை பெய்தால் கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை என்றும் மலைப்பாதையில் நீரோடைகளில் குளிக்க அனுமதியில்லை என்றும் கூறினர்.