மகாலிங்கபுரம், தி.நகர், கதீட்ரல், ஸ்கை வாக் சாலை முக்கிய மேம்பால கீழ் பகுதியை அழகுபடுத்த மாநகராட்சி திட்டம்: ஏப்ரலுக்குள் பணிகளை முடிக்க தீவிரம்  சிறு கடைகள், பொதுமக்களுக்கு இருக்கை வசதி  இரு சக்கர வாகன நிறுத்தங்களும் அமைக்கப்படும்

2 hours ago 1

சென்னை, நவ. 26: மகாலிங்கபுரம் சாலை, தி.நகர், ஓமந்தூரர் சாலை, கதீட்ரல் சாலை மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த பணிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் பாலங்கள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி பாலங்கள், சாலைகள் மற்றும் பூங்காக்கள் ஆகியவற்றை அழகுபடுத்த பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளான விமான நிலையம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை, கோயம்பேடு மேம்பாலம், அண்ணா மேம்பாலம், மெரினா கடற்கரை, மெட்ரோ ரயில் நிலைய தூண்கள், திருமங்கலம் மேம்பாலம் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச நகரங்களுக்கு இணையாக அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த இடங்களில் வண்ண ஓவியங்கள் வரைதல், மரம், செடிகளை நட்டு பசுமையாக பராமரித்தல், வண்ண ஒளிரும் விளக்குகளால் அழகுபடுத்துதல், முக்கிய சந்திப்புகளில் செயற்கை நீரூற்றுகளை உருவாக்குதல் போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதை தொடர்ந்து, தற்போது சென்னையில் உள்ள முக்கிய மேம்பாலங்களின் கீழ் பகுதிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அழகுபடுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: சென்னையில் உள்ள முக்கிய மேம்பாலங்களை அழகுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, தற்போது, மகாலிங்கபுரம் சாலையில் உள்ள மேம்பாலம், எம்எல்ஏ ஹாஸ்டல் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம், டிடிகே சாலை, சிவானந்தா சாலை, தி.நகர் மேம்பாலம், ஸ்கைவாக் அருகே உள்ள மேம்பாலம் கீழ் பகுதிகள் முதற்கட்டமாக அழகுபடுத்தப்பட உள்ளது. தற்போது டிடிகே சாலையில் உள்ள மேம்பாலத்தை அழகுபடுத்த ரூ.4.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.நகர், ஓமந்தூரார் அருகே உள்ள ரயில்வே மேம்பாலம் கீழ் பணிகளை மேற்கொள்ள ரூ.2 கோடி திட்ட மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான டெண்டர் விரைவில் விடப்படும். மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியை பசுமையுடன் கூடிய பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதியாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் சிறு கடைகள், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள், இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்கப்படும். மேலும், பாலத்தின் தூண்களில் அமைக்கப்பட்டுள்ள செடிகள் பராமரிப்பின்றி வாடியதால் அவற்றை முழுவதுமாக அகற்றிவிட்டு தரையில் மட்டும் செடிகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் செடிகள் வாடாமல் பராமரிக்க முடியும். பாரம்பரிய செடிகள் வளர்க்கப்பட உள்ளது. இந்த மேம்பாலம் கீழ் அந்த சாலைக்கு வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் உருவச்சிலை வைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த பணிகள் அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.

The post மகாலிங்கபுரம், தி.நகர், கதீட்ரல், ஸ்கை வாக் சாலை முக்கிய மேம்பால கீழ் பகுதியை அழகுபடுத்த மாநகராட்சி திட்டம்: ஏப்ரலுக்குள் பணிகளை முடிக்க தீவிரம்  சிறு கடைகள், பொதுமக்களுக்கு இருக்கை வசதி  இரு சக்கர வாகன நிறுத்தங்களும் அமைக்கப்படும் appeared first on Dinakaran.

Read Entire Article