மகாராஷ்டிர துணை முதல்வரை விமர்சித்த வழக்கு; நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா முன்ஜாமீன் 17ம் தேதி வரை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

1 week ago 7

சென்னை: மும்பையில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜ கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார். இதையடுத்து, குணால் கம்ரா மீது மும்பை கார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் தனக்கு டிரான் சிட் முன்ஜாமீன் (வேறு மாநிலத்தில் பதியப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்படும் மனு) கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குணால் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தான் விழுப்புரத்தில் வசித்து வருவதாகவும், மும்பை சென்றால் தன்னை போலீசார் கைது செய்வார்கள் என்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்மோகன், குணால் கம்ராவுக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குணால் கம்ரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சுரேஷ், மனுதாரர் மீது மேலும், மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்ராவின் வீட்டுக்கு சென்ற அவரது வயதான பெற்றோரை போலீசார் துன்புறுத்தி உள்ளனர். கம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள் என்றார். இதையடுத்து, குணால் கம்ராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமீனை வரும் 17ம் தேதி வரை நீட்டித்த நீதிபதி, இடைப்பட்ட காலத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ளுமாறு குணால் கம்ராவை அறிவுறுத்தி விசாரணையை தள்ளிவைத்தார்.

The post மகாராஷ்டிர துணை முதல்வரை விமர்சித்த வழக்கு; நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா முன்ஜாமீன் 17ம் தேதி வரை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article