
காந்திநகர்,
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியான நீலம்பென் பாரிக் (92) காலமானார். மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் பேத்தி இவர். குஜராத்தில் வசித்து வந்த இவர், பழங்குடியின பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தவர் ஆவார். பழங்குடிப்பெண்கள் முன்னேற்றத்துக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தவர். குஜராத்தில் ஒரு குக்கிராமத்தில் பள்ளி தொடங்கி நடத்தி வந்தார். பழங்குடி பெண்களுக்கு கல்வியும் தொழிற்பயிற்சியும் அளித்தார். காந்தி தனது மருமகள்களுக்கு எழுதி கடிதங்களை நூலாக தொகுத்துள்ளார். காந்திக்கும் அவரின் மூத்த மகனுக்கும் இடையே இருந்த சிக்கலான உறவு குறித்து இவர் எழுதிய 'காந்தி'ஸ் லாஸ்ட் ஜிவெல்: ஹிராலால் காந்தி' மிக பிரபலம்.
நீலம்பென்னும் அவரது கணவர் யோகேந்திரபாயும் கிராமப்புற சமூகங்களின் மேம்பாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற பிறகும், அவர் சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நீலம்பென் மறைவிற்கு மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியும் ஹரிலால் காந்தியின் பேத்தியுமான நீலம்பென் மறைவுச் செய்தி மனவேதனை அளிக்கிறது. காந்திய சித்தாந்தத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட அவர், சமூகத்தை, குறிப்பாக பெண்களை மேம்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது மறைவு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.