
நாமக்கல்லில் சோமோட்டோ, ஸ்விகி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு பதிலாக ஹோட்டல் உரிமையாளர்களே சேர்ந்து புதிய உணவு டெலிவரி செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.
நாமக்கலில் ஹோட்டல்கள், பிரியாணி கடைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களிடையே கமிஷன் பிரச்சினை ஏற்பட்டிருந்தது. விளம்பர கட்டணம், மறைமுக கட்டணம் போன்றவற்றால் வரும் லாபத்தில் 50% பாதிப்பு ஏற்படுவதாக நாமக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் குரல் எழுப்பி வந்தனர்.
பிரச்சினைகளை தீர்க்கக்கோரி சம்பந்தப்பட்ட சோமோட்டோ, ஸ்விகி நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கைகளை நிறுவனம் பரிந்துரை செய்யவில்லை. இந்நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் சோமோட்டோ, ஸ்விகி டெலிவரி நிறுவனங்களுக்கு உணவு வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் சோமோட்டோ, ஸ்விகி போன்ற செயலிகளுக்கு பதிலாக ZAAROZ (ஜாரோஸ்) என்ற பெயரில் புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து ஐம்பதுக்கு மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.