புதுடெல்லி: “மகாகும்பமேளாவில் கரைப்பதற்காக பூசாரி ஒருவர் பாகிஸ்தானில் இருந்து 400 இந்துக்கள், சீக்கியரின் அஸ்தியை இந்தியா கொண்டு வந்துள்ளார். உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழாவான மகாகும்பமேளா கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 26ம் தேதியுடன் நிறைவடைகிறது. 45 நாள்கள் நடைபெறும் மகாகும்பமேளாவில் கலந்து கொண்டு கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராட உலகம் முழுவதிலுமிருநது நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு, போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது. மகாகும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானிலிருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பஞ்சமுகி அனுமன் கோயில் மற்றும் சுடுகாட்டின் தலைமை பூசாரியாக இருப்பவர் ராம்நாத் மிஸ்ரா. மகாகும்பமேளாவில் புனித நீராட குடும்பத்துடன் வந்துள்ள ராம்நாத் மிஸ்ரா மகாகும்ப நகரின் செக்டார் 24ல் தங்கி உள்ளார்.
மேலும், அவர் புனித நதிகளில் கரைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து 400 இந்துக்கள், சீக்கியர்களின் அஸ்தியை கொண்டு வந்துள்ளார். இதுபற்றி ராம்நாத் மிஸ்ரா கூறியதாவது, “வரும் 21ம் தேதி நிகோம்பாத் காட்டில் 400 இந்துக்கள், சீக்கியர்களின் அஸ்தி அடங்கிய கலசங்களை வைத்து பூஜை நடத்தப்படும். பின்னர் 22ம் தேதி டெல்லியில் இருந்து ஹரித்துவாருக்கு ரத ஊர்வலத்தில் எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படும்” என தெரிவித்தார்.
The post மகாகும்பமேளாவில் கரைக்க பாகிஸ்தானில் இருந்து 400 இந்துக்கள், சீக்கியரின் அஸ்தி கொண்டு வந்த பூசாரி appeared first on Dinakaran.