மகாகும்ப் நகர்: மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி விட்டதாக உபி அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன.13ல் தொடங்கியது. பிப்.26 வரை நடைபெறும் இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். நேற்று மாலை வரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உபி அரசு தெரிவித்துள்ளது.
மனித வரலாற்றில் இதுபோன்ற மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் ஒரு இடத்தில் கூடியது இதுவே முதல் முறை என்று கணிக்கப்பட்டுள்ளது. புனித நீராடிய மக்களின் எண்ணிக்கை உலக நாடுகளில் இந்தியா மற்றும் சீனாவை தவிர மற்ற நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம் ஆகும். நேற்று மட்டும் திரிவேணி சங்கமத்தில் மாலை 6 மணி வரை 92 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் நீராடினர்.
மகா கும்பமேளா தொடங்குவதற்கு முன், 40 கோடி முதல் 45 கோடி வரை பக்தர்கள் நீராடலாம் என்று கணிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கையை எல்லாம் தாண்டிவிட்டது. அதிகபட்சமாக ஜனவரி 29 அன்று, மவுனி அமாவாசையை முன்னிட்டு ஒரே நாளில் 8 கோடி பக்தர்கள் மகா கும்பத்தில் புனித நீராடினர். அன்று ஏற்பட்ட நெரிசலில் உபி அரசு கணக்குப்படி 30 பக்தர்கள் பலியானார்கள்.
The post மகாகும்பமேளாவில் 50 கோடி பேர் புனித நீராடினர்: உபி அரசு தகவல் appeared first on Dinakaran.