மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்று சிவபெருமானை வழிபடுவோருக்கு எல்லா நன்மைகளும் கிட்டும் என்பது ஐதீகம். மகா சிவராத்திரி குறித்து பல புராணக் கதைகள் உள்ளன.உமாதேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை தன் திருக்கைகளினால் மூட உலகமெல்லாம் இருள் சூழ்ந்தது. அந்நாளே சிவராத்திரி என்கின்றனர். அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்த தேவர்களுக்காக சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்ததும் உமாதேவி பயந்து நடுங்கி கைகளை எடுத்து விட்டாள். தேவியின் பயத்தினைப் போக்க சிவன் நெருப்பு ஒளியினை குளிர் நிலவாக மாற்றி அம்பிகையை ஆட்கொண்டார்.
பாற்கடலில் விளைந்த அமுதத்தினை உலகைக் காப்பதற்காகச் சிவபெருமான் உண்ணவே பெருமானுக்கு நஞ்சு ஏதும் கேடு விளைவிக்குமோ என்று அஞ்சி தேவர்கள் இரவு முழுவதும் விழித்து இருந்த நாளே சிவராத்திரி என்றும் புராணங்களில் கூறப்படுகிறது. பிரம்மனும் திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் எனப் போரிட அதனால் ஆணவ இருள் உலகைச் சூழ்ந்ததாகவும், அந்த இருளினைக் கண்டு விண்ணிலுள்ள தேவர்கள் அஞ்சவே அவர்களைக் காக்க சிவபெருமான் லிங்கமாக அவதரித்து சுடர்விட்டு அனைவருக்கும் அறிவு ஊட்டிய நாளே சிவராத்திரி என்றும் கூறுகிறார்கள்.
சிவராத்திரி முழுவதும் தூங்காமல் இருந்து சிவபெருமானை வணங்குவது ஐதீகம். அதனை இன்றும் கடைபிடித்து வருகிறார்கள். கோயில்களில் சிவராத்திரி இரவன்று நான்கு கால பூஜை அமைத்து சிறப்பாக வழிபடுவர்.சிவராத்திரி, நவராத்திரி என்னும் இரு பண்டிகைகள் மட்டுமே ‘ராத்திரி’ என்னும் அடைமொழியில் உள்ளது. இதில் ஒன்று சிவனுக்கும் மற்றொன்று சக்திக்கும் உரியதாகும்.
நித்ய சிவராத்திரி, பக்க்ஷ சிவராத்திரி, மாச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என சிவராத்திரி ஐவகைப்படும். சிவனுக்கு உகந்த ராத்திரிகளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் இவ்வுலக சுகமும், கைலாசமும் கிடைக்கும்.பகல் முழுவதும் உபவாசம் இருந்து, சிவாலயத்தில் நெய் விளக்கு ஏற்றி நான்கு காலத்திலும் சிவபூஜை செய்து ஐந்தெழுத்தை உச்சரித்து மறு நாள் காலை பாராயணம் செய்ய வேண்டும். சிவராத்திரியன்று ஒரு பஞ்சாட்சரம் உச்சரித்தால் ஏனைய நாட்களில் 100 பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும்.
– டி.லதா, நீலகிரி.
The post மகா சிவராத்திரி appeared first on Dinakaran.