கோவை,
இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகா கும்பமேளாவுக்கு தமிழகத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், வாரணாசி மற்றும் அயோத்திக்கு அதிகப்படியான பக்தர்கள் செல்வார்கள். அவர்களின் வசதிக்காக ஆன்மிக சிறப்பு சுற்றுலா ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கோவையில் இருந்து வருகிற பிப்ரவரி மாதம் 18-ந் தேதி திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா வழியாக வாரணாசிக்கு இயக்கப்பட உள்ளது.
புதுப்பொலிவூட்டப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயம், அன்னபூரணி ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், சங்கட்மோட்சன் ஆலயம், அனுமன் ஆலயம், துளசி மானஸ் ஆலயம், கங்கா ஆர்த்தி, பிரயாக்ராஜ்(அலகாபாத்) திரிவேணிசங்கமம், பாதாள அனுமன் ஆலயம், அயோத்தி புதிய குழந்தை ராமர் ஆலயம் போன்ற இடங்களை இந்த ஆன்மிக சுற்றுலாவில் காணலாம்.
இந்த சுற்றுலாவில் ரெயில் கட்டணம், ஓட்டலில் தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து, சைவ உணவு, ஜி.எஸ்.டி. ஆகிய செலவுகள் அடங்கும். இது 8 நாட்கள் கொண்ட சுற்றுலா. இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் விடுப்பு சலுகைகளையும் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.