
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய மகா கும்பமேளா, வரும் 26-ந்தேதி நிறைவடைய உள்ளது.
மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பெண்களை ஆபாசமான முறையில் சித்தரித்து சில சமூக வலைதள பக்கங்கள் வீடியோக்களை வெளியிட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து சமூக வலைதளங்களை உத்தரபிரதேச சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து கவனமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் மகா கும்பமேளா தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக 140 சமூக வலைதள பக்கங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகா கும்பமேளா டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளா நிறைவு பெற இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், ஏராளமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், எவ்வளவு கூட்டம் வந்தாலும் அதை சமாளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.