
மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு, அந்த கல்லூரி முதல்வர் ஆதரவாக செயல்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, மத்திய, மாநில அரசுகளுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த உத்தரவுகளை அமல்படுத்தப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து வருகிறார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, பணி செய்யும் இடத்தில் பாலியல் தொல்லை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகள் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார்.
பின்னர், இந்த வழக்குகளின் புலன் விசாரணையை விரைந்து விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும் என்று விசாரணை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். பெண்கள் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இதுவரை 36 ஆயிரம் உள்புகார்கள் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு என உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் 746 உள்புகார்கள் கமிட்டியின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து கமிட்டிகளின் விவரங்களும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்" என்றும் அசன் முகமது ஜின்னா கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா கூறியதாவது:-
"அரசுத்துறைகளில் பணி நியமனம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கும்போதும் பாலியல் உணர்திறன் பாடத்தில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கலாம். அதாவது கீழ்நிலை பணி முதல் உயர் நிர்வாக பணி வரையில் உள்ள அனைவருக்கும் பெண்மையை வெறுக்கும் போக்கினை மாற்றும் பொருட்டு, பாலியல் உணர்திறன் பாடத் தேர்ச்சி கட்டாயம் என்று பணியாளர்கள் விதிகளில் திருத்தம் கொண்டு வரலாம்.
பெண்கள் முன்னேற்றத்துக்காக சமூக நலத்துறையில் இருந்து பிரித்து பெண்கள் மேம்பாட்டுத்துறை என தனித்துறையை தமிழ்நாடு அரசு ஏன் உருவாக்கக்கூடாது" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு தலைமை குற்றவியல் வக்கீல், "இவையெல்லாம் மாநில அரசின் கொள்கை சார்ந்த விவகாரமாகும். இப்போது இந்த ஐகோர்ட்டு செய்யும் பரிந்துரைகளில் எவையெல்லாம் அமல்படுத்த முடியும்? என்று அரசு ஆராய்ந்து முடிவு செய்யும். பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், பாலியல் தொல்லைகளிலிருந்து அவர்களை பாதுகாத்து, அச்சமின்றி தற்சார்புடன் வாழ பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது" என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, "பெண்கள் மேம்பாட்டுத்துறை உருவாக்க சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களிடம் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் கலந்து ஆலோசனை செய்யவேண்டும். இந்த வழக்கை வருகிற ஏப்ரல் 15-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்" என்று உத்தரவிட்டார்.